தமிழகத்தில் நாம் தமிழர் ஆட்சி அமையும் – கண்ணகி விழாவில் சீமான் உறுதி

தேனி மாவட்டம், கூடலூரில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் கண்ணகி பெருவிழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும் போது:–

கண்ணகி கோவிலை இதுவரை அரசு கண்டு கொள்ளவில்லை. நாங்கள் கண்ணகி பெருவிழாக் கொண்டாட்டம் என்று அறிவித்த பிறகு, இந்த திருவிழா கொண்டாட அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஒரு நாள் நாம் தமிழர் ஆட்சி அமையும். அப்போது கண்ணகி கோவில் திருவிழாவை, அகில உலகப் பெருவிழாவாகக் கொண்டாடுவோம்.

மு.க.ஸ்டாலின் இப்போது தான் 100 நாள் வேலைக்கு சேர்ந்து உள்ளார். தி.மு.க. தொண்டர்களுடன் ஏரிகளை தூர்வாரப் போகிறாராம். தூர்ந்து போக காரணம் யார்? கடந்த 5 ஆண்டுகளில் தான் தூர்ந்து போனதா? 20 ஆண்டுகளாக வைகை அணை தூர்வாரப்படவில்லை.

3 ஆண்டுகள் கழித்து மணல் அள்ளுவதை நிறுத்துவோம் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். 3 ஆண்டுகளுக்கு மண் அள்ளிவிட்டு, ஆட்சி முடிந்துவிட்டது என்று சென்று விடுவார்.

ஈழத்தில் மொழிக்காக செத்தார்கள். இங்கே இந்தியைத் திணிக்கிறார்கள். ‘நீட்’ தேர்வை நான் கூட தேர்வு என்று தான் நினைத்தேன். அது டெய்லர் வேலை என்று இப்போது தான் புரிகிறது. ஆண், பெண்களின் சட்டையைக் கிழிப்பது, உள்ளாடையைக் கழட்டச் செய்வது தான் தேர்வா? தமிழகத்தில் சிறந்த மருத்துவர்கள் வருவதை தடுக்கவே இந்தத் தேர்வு.

ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களுக்கு எல்லாம் கையெழுத்து போட்ட ஓ.பன்னீர்செல்வம் தான் இப்போது நீதி கேட்டு பயணம் வருகிறார். பிரதமரும், முதல்–அமைச்சரும் முதலாளிகளுக்கான தரகர் வேலையைத் தான் செய்கிறார்கள்.

தமிழ் சிறந்த மொழி என்று மோடி சொல்கிறார். இப்போது தான் அவருக்குத் தெரிகிறதா? தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் தமிழில் வாதிடும் வாய்ப்பை மோடி பெற்றுத் தருவாரா? பாராளுமன்றத்தில் தமிழில் பேசும் வாய்ப்பை, அங்கீகாரத்தை பெற்றுக் கொடுப்பாரா? தமிழகத்தில் எவன் ஒருவன் உண்மையைப் பேசினாலும், அரசு செய்யும் தவறை எதிர்த்தாலும் தேசத்துரோகி என்கிறார்கள். பாரதநாடு பைந்தமிழர் நாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு சீமான் பேசினார்.

Leave a Response