நீட் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்யவேண்டும் – சீமான் வலியுறுத்தல்

நீட் தேர்வினை நிரந்தரமாக இரத்து செய்யவும், அரசு மருத்துவர்களின் மேற்படிப்பிற்கான 50% இட ஒதுக்கீட்டினை உறுதி செய்யவும் தமிழக அரசு தனிச்சட்டங்கள் இயற்றிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (08-05-2017) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இன்று இந்திய நாடு முழுக்க நடந்து கொண்டு இருக்கிற மருத்துவக் கல்விக்கான நீட் (NEET – NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) எனப்படும் நுழைவுத்தேர்வினால் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவ-மாணவியர் பெரும் இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகி உள்ளனர். திடீரெனப் புகுத்தப்பட்டிருக்கும் இந்த நுழைவுத்தேர்வுகளினால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய மாணவ-மாணவியர் மிகவும் பாதிப்படைந்திருக்கிற சூழலை பாஜக தலைமையிலான மத்திய அரசு உண்டாக்கியிருக்கிறது.

இலட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து அதற்கெனத் தனிப்பயிற்சி மேற்கொண்டு தயாரான மாணவர்களால் மட்டுமே எதிர் கொள்ள இயலுகிற இந்த நுழைவுத்தேர்வினை கிராமப்புற மாணவர்களால், பொருளாதார அடித்தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியர்களால் எவ்விதத்திலும் எதிர்கொள்ளக் கடினச்சூழல் இருக்கிற இந்நிலையில் அதிமுக தலைமையிலான தமிழக அரசு சல்லிக்கட்டு தடையை நீக்க தனிச்சட்டம் இயற்றியது போல நீட் தேர்வினை ரத்து செய்ய ஏதுவாகத் தனிச்சட்டம் பிறப்பிக்காமல் தன் கட்சி பிரச்சனைகளில் மூழ்கிக் கிடந்தது தமிழக மக்கள் மீதான அக்கறையின்மையை உறுதி செய்கிறது.

அதே போல அரசு மருத்துவமனைகளில், சுகாதார மையங்களில் பணி புரிகிற மருத்துவர்களுக்கென மேற்படிப்பில் இருந்த 50% இடஒதுக்கீட்டினை இரத்து செய்த நீதிமன்ற உத்திரவினால் மிகப்பெரிய போராட்டக்களத்தில் மருத்துவர்கள் இறங்கி போராடி வருகிறார்கள். கிராமப்புறங்களில் மருத்துவச்சேவை கிடைப்பதே அரிதான ஒரு நாட்டில் இது போன்ற உத்தரவுகள் எவ்விதமான பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது ஆளும் அரசுகளுக்கோ, நீதிமன்றங்களுக்கோ தெரியாமலில்லை. இன்னும் நாட்டில் 70% கிராமங்களில் ஆரம்பச் சுகாதார மையங்கள் கூட அமைக்கப்படாத சூழலில் அரசு மருத்துவமனைகளில் கிராமப்புறங்களில் பணிபுரிகிற மருத்துவர்களுக்கென மேற்படிப்பில் இருந்த 50% இடஒதுக்கீட்டினை ரத்து செய்திருப்பதன் மூலம் இனி கிராமப்புறங்களில்- அரசு மருத்துமனைகளில் பணிபுரிய மருத்துவர்கள் எவ்வாறு முன்வர முடியும்.? மருத்துவமும், கல்வியும் ஏற்கனவே தனியார்மயமாகி விட்ட சூழலில் எளிய மக்களின் இறுதி நம்பிக்கையான அரசு மருத்துவமனைகள், கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிகிற மருத்துவர்களின் எதிர்காலத்தைப் பொசுக்கிப் போடுகிற இந்த உத்தரவினால் பாதிக்கப்படப்போவது மருத்துவர்களை விட எளிய மக்களே என்கிற உண்மையை ஏன் ஆளும் அரசுகள் புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் காட்டுகின்றன? ஏற்கனவே கிராமப்புறங்களில் பணிபுரிய மருத்துவர்கள் அரிதாகி விட்ட சூழலில் இது போன்ற உத்தரவுகள் மக்கள் உயிரோடு விளையாடுவதற்குச் சமமானது. மேலும் இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவில் இரண்டு நீதிபதிகளும் பிறப்பித்த மாறுபாடான உத்தரவுகளால் ஏற்கனவே இருந்த நிலை இன்னும் குழப்பமாகி என்ன நடக்கிறது என்று தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

உயிரைக் காக்க வேண்டிய மருத்துவர்கள் தங்கள் உரிமையைக் காக்க வீதியில் இறங்கி முழக்கமிட்டு போராட நேர்ந்திருக்கும் இந்நிலை குறித்து ஆளும் மத்திய-மாநில அரசுகளுக்கு எவ்விதமான அக்கறையும் இல்லை. கிராமப்புறங்களில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உரிமையைப் பாதுகாக்க தங்கள் வாழ்நாட்களை அர்ப்பணித்துச் சேவை செய்யும் மருத்துவர்களின் மேற்கல்வி கற்கும் உரிமையைப் பாதிக்கிற நீதிமன்ற உத்தரவுகளுக்கு மாற்றாக மத்திய–மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்றி போராடி வருகிற மருத்துவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திருக்க வேண்டும். மருத்துவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தினால், நோய்களுக்கு உள்ளாகி அரசு மருத்துவமனைகளுக்கு வருகிற ஏழை எளிய மக்களுக்கான மருத்துவம் இன்று கேள்விக்குறியாகி இருக்கிறது. விலைமதிப்பற்ற மனித உயிர் தொடர்பான ஒரு பிரச்சினையில் ஆளும் அரசுகள் காட்டுகிற அலட்சியமும், நீதிமன்றங்களின் மாறுபட்ட கருத்துக்களும் மக்களிடையே மாபெரும் பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

போராடி வருகிற மருத்துவர்கள் எழுப்புகிற எந்த வினாக்களுக்கும் பதிலளிக்காமல் மருத்துவச் சங்கங்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிற வண்ணம் ஒரு தரப்பினரை மட்டும் அழைத்துப் பேசுவது, போராட்டக் களத்தில் அரசியல் நிலைகளுக்குகேற்ப போராட்டக் கோரிக்கைகளை முனை மழுங்க தனது ஆட்கள் மூலம் உள்வேலை செய்வது போன்ற பிரித்தாளும் சூழ்ச்சிகளை ஆளும் அரசுகள் தொடங்கி இருப்பது போராடும் மருத்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆளுகின்ற தமிழக அரசு மிக முக்கியமான இந்த விவாகரங்களில் மிக விரைவாகச் செயல்பட்டு நீட் தேர்வினை நிரந்தரமாக இரத்து செய்யவும், அரசு மருத்துவர்களின் மேற்படிப்பிற்கான 50% இடஒதுக்கீட்டினை உறுதி செய்யவும் சட்டமன்றத்தைக் கூட்டி தனிச்சட்டங்கள் இயற்றி, அரசிதழில் வெளியிட ஆவண செய்யும்படி நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response