அமெரிக்காவின் ரகசியத் திட்டத்தைச் செயல்படுத்தவா நியூட்ரினோ ஆய்வுக்கூடம்?

 தேனி மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ள நியூட்ரினோ ஆய்வகத்தினால் ஏற்படவிருக்கும் சூழல் மற்றும் இந்தியாவின் பாதுகாப்புக்கே உண்டாகும் தீமைகளை விளக்கும் மா.லெ. தீப்பொறியின் கட்டுரை.

பிரபஞ்சத்தின் தோற்றத்தைக் கண்டறியும் ஆராய்ச்சி எனப் பிரபலப்படுத்தப்பட்டு, தேனி மாவட்டம் போடி மேற்கு மலைப் பகுதியில் உத்தமபாளையம் தாலுகாவில், தேவாரம் -பொட்டிபுரம் கிராமத்திற்கு அருகில் அம்பரசர் காடு எனப்படுகிற 1300 மீட்டர் உயரமுள்ள குன்றில் 1 கி.மீ. அடியில் மலையைக் குடைந்து ஒரு பாதாள ஆய்வுக் கூடம் அமைக்கப்படுகிறது.

மோடி தலைமையிலான அரசாங்கமானது, இத்திட்டத்திற்கு அனுமதி அளித்திருப்பதாக திட்ட இயக்குனர் நாபா கே.மோண்டல், தேனியில், கடந்த 2015 ஜனவரி 5 ஆம் தேதி அறிவித்துள்ளார். அரசியல் கட்சிகள், சுற்றுச் சூழல் அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் துவங்கியுள்ளன. எனினும், இந்திய அணுசக்தித் துறை அமெரிக்க உதவியுடன் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைப்பதற்கான சாலைகள், வேலிகள், கட்டிடங்களை அமைக்கும் பணியை துவங்கி ஓராண்டு ஆகிவிட்டது. கேரளாவில் எதிர்ப்புகளை உருவாக்கிய, நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்திலிருந்தும் துரத்தப்பட்ட இத்திட்டம் தற்போது தேனி மாவட்ட மக்களை, தமிழகத்தையும் அச்சத்திற்குள் தள்ளியுள்ளது.

நியூட்ரினோ ஆய்வு எதற்காக?

இந்திய அரசாங்கம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பின்வருமாறு கூறுகின்றன. ‘நியூட்ரினோக்கள் என்பது எலக்ட்ரான்களைப் போல அடிப்படைத் துகள்களாகும். ஆனால் இவை அணுவின் பகுதி இல்லை இவை பிரபஞ்சத்தில் பெருமளவு உள்ளன. இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான பெரு வெடிப்பின் பொழுது மிகப் பெரிய அளவில் இத்துகள்கள் வெளிப்பட்டன. மேலும், காற்று மண்டலத்துடன் காஸ்மிக் கதிர்கள் உறவாடும் பொழுது தொடர்ந்து நியூட்ரினோக்கள் உருவாக்கப்படுகின்றன; மிகமிக எடைக் குறைந்த கதிர்களாக இவை பல்லாயிரக்கணக்கில் அன்றாடம் நமது உடலைக் கடந்து செல்கின்றன. இதைப் பற்றிய ஆய்வு என்பது இயற்கையின் இயங்காற்றல் பற்றி பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி அறிந்து கொள்ள உதவும். இது முழுக்க முழுக்க வெறும் விஞ்ஞான நோக்கம் மிக்க ஆய்வே ஆகும். மானிடத்திற்கு இதனால் எந்த பாதிப்பும் கிடையாது’. இவையே அரசாங்கத்தின் கருத்தாகும்.

கடந்த 2005ல் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷினால் கையெழுத்திடப்பட்ட இந்திய – அயக்கிய அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தின் ஓர் அங்கமே இந்த நியூட்ரினோ ஆய்வுக் கூடத் திட்டம். அணு சக்திக்கு அடிப்படையான நவீன ‘துகள்’ அறிவியலில் அமெரிக்கா வல்லமை பெற முயற்சிக்கிறது. சிகாகோவில் ஃபெர்மி லேப் என்ற இயற்பியல் கூடத்தை அமைத்து வருகிறது. ஆய்வுக் கூடம் அமெரிக்க அணுசக்தி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற ஆற்றல் மிக்க நியூட்ரினோ கற்றைகளைப் பெற்றுக்கொள்ள, புவி உருண்டையின் நேர் எதிர் பக்கத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆய்வுக் கூடம் தேவைப்படுகிறது.

ஃபெர்மி லேப்பிற்கு பங்களிப்பு செய்வதே இந்திய நியூட்ரினோ ஆய்வுக் கூடமாகும். இதன் திட்ட இயக்குனர் நாபா கே.மோண்டல், சர்வதேச நியூட்ரினோ கமிட்டி உறுப்பினராவார். ஃபெர்மி லேப்பின் வழிநடத்தும் குழு உறுப்பினரும் ஆவார். யாருக்காக இவர் பணியாற்றுவார்? இந்தியாவிற்கா?அமெரிக்காவிற்கா?

தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வுக் கூடம்தான் உலகிலேயே 7,000 கி.மீ.க் கும் கூடுதலான தொலைவில் உள்ள ஆலைகளில் தயாரித்து அனுப்பப்படும் நியூட்ரினோக்களை பரிசோதிக்கும் ஆற்றல் மிக்க உலகத்தரம் வாய்ந்த ஆய்வுக் கூடம் ஆகும். (இது ஜெனிவாவில் உள்ள CERN போல சர்வதேச மய்யமாக முன்னிறுத்தப்பட உள்ளது). பூமியின் நடுப்பகுதியை, அச்சைக் கடந்து ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கற்றையாக நியூட்ரினோக்கள் வந்து சேர முடியுமென்றால்…, நவீனத் ‘துகள்’ இயற்பியல் மற்றும் அணு விஞ்ஞானத்தின் அடிப்படையில் சிக்கலான நவீன ஆயுதங்கள் உருவாக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகளை அறிவியல்ரீதியாக மறுப்பதற்கில்லை என்கின்றனர், உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள்.

இந்தியாவிலும், அமெரிக்காவிலும், நியூட்ரினோ ஆராய்ச்சிகளை இரு நாட்டு அரசாங்கங்களுடைய அணு சக்தி தயாரிக்கும் துறைகள்தான் கட்டுப்படுத்துகின்றன. அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் இந்திய அணு சக்தி ஒப்பந்தங்கள் என்ற கவலையிலிருந்தும், இந்திய – அய்க்கிய அமெரிக்க ராணுவ கட்டமைப்பு ஒப்பந்தத்தை மீண்டும் பத்தாண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் முடிவெடுத்துள்ளது என்ற அடிப்படையிலிருந்தும், இந்தத் திட்டத்தை மதிப்பிட வேண்டியுள்ளது.

நியூட்ரினோ திட்டத்தின் அபாயகரமான பாதை

நியூட்ரினோ ஆய்வுக் கூடமானது தமிழ் நாட்டில் முதன்முதலில் 2008ல் நீலகிரி மலையில் முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு அருகில் உள்ள சிங்காரா என்ற இடத்தில் அமைக்கப்படுவதாக திட்டமிடப்பட்டது. இது யானைகளின் முக்கியமான வழித்தடமும் ஆகும். பெரியளவிலான கட்டுமானப் பணிகள், அன்றாடம் நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்களின் செயல்பாடு, வன விலங்குகளின் இயற்கை வாழிடத்திற்கு அச்சுறுத்தலாக மாறும் என்ற சுற்றுச் சூழல் அமைப்புகளின் எதிர்ப்பினால், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை மத்திய அமைச்சரகம் இதற்கு அனுமதி மறுத்தது.

எனவே, இத்திட்டத்தை டாடா நிறுவனம் உள்ளிட்ட ஏழு விஞ்ஞான நிறுவனங்களின் சங்கமான ‘நியூட்ரினோ கூட்டுக்குழு’ தேனி மாவட்டம் சுருளிக்கு மாற்ற முடிவெடுத்தது. இப்பகுதியில் சுருளியாறு அணை, முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை, ஆனை இறங்கல் அணை போன்ற பல அணைகளும் மேகமலை வனச் சரணாலயமும் இருந்ததாலும், யானைகள் நடமாடும் பகுதியாக இருந்ததாலும் கைவிடப்பட்டது. மாற்றாக, போடி மேற்கு மலைப் பகுதி – தேனி மாவட்டமும், கேரளாவின் இடுக்கி மாவட்டமும் சந்திக்கும் மலைப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது.

ரூ.1500 கோடி செலவாகும் என மதிப் பிடப்படுகிற இத்திட்டத்திற்கானத் தொகையை இந்திய அரசின் அணுசக்தி துறையும், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையும் தருகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மலைக்குன்றிற்குள் காஸ்மிக் கதிர்கள் நுழையாதவாறு பாதாள ஆய்வுக் கூடமானது சுற்றிலும் சுமார் 1 கி.மீ. அளவிற்கு மலைப்பகுதி இருக்குமாறு அமைக் கப்படுகிறது. சுமார் 2.5 கி.மீ. நீளமுள்ள 16,235 ச.மீ. பரப்பளவுள்ள, 3,18,181 க.மீ கொள்ளளவு கொண்ட நான்கு குகைகள் உருவாக்கப்படுகின்றன. 8 லட்சத்திற்கும் அதிகமான டன் எடையுள்ள பாறைகள் அகற்றப்பட உள்ளன. குகை ஆய்வ கத்திற்குள் 50,000 டன் எடையுள்ள காந்த சக்தி யூட்டப்பட்ட இரும்புக் கலோரி மீட்டர் கண்டு பிடிக்கும் அளவுமானி அமைக்கப்பட உள்ளது. இது 10,000 கி.மீ. தொலைவில் இருந்து வரும் நியூட்ரினோ துகள்களையும் கண்டறியக்கூடியது.

ஆய்வுக் கூடம் அமைக்க 1 லட்சம் டன் இரும்பு, 35,000 டன் சிமெண்ட், மணல், உலோ கங்கள் போன்ற கட்டுமானப் பொருட்கள் தேவைப்படுகின்றன. வெடி வைத்து குகையைக் குடைவதால் உருவாகும் பாறை இடிபாடுகளை அகற்ற, கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல 95,000 லாரிகள் நான்காண்டுகளில் இயக்கப்படவிருக்கின்றன. அதாவது, நாளொன்றுக்கு 130 லாரிகள் சாலையில் ஓடப் போகின்றன. பாறைகளை அகற்றி எடுத்துச் செல்லும் பணி தமிழக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறையானது இதற்கான சாலைகளை அமைத்துக் கொடுத்துள்ளது.

இயற்கை பொக்கிஷத்திற்கு நேரிடும் பேராபத்துகள்

2010 நவம்பரில், கோவை – சலீம் அலி பறவைகள் மய்யம், அவசர கதியில், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரித்தது. ஆய்வுக் கூடத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தை மட்டுமே ஆரமாகக் கொண்ட வட்டப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டது. உத்தமபாளையம் தாலுகாவின் பொட்டிபுரம், சங்கராபுரம், தேவாரம், ராசிங்கபுரம் மற்றும் கேரளாவின் தேவிகுளம், உடும்பன் சோழா தாலுக்காக்களின் சில பகுதிகளில் நிலவுகிற உயிரியல் பன்மையை மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. ஆய்வகம் 120 ஆண்டு காலம் வரை செயல்படும் தன்மை வாய்ந்தது. நில அதிர்வுகளை தாக்குபிடிக்க வேண்டியது முக்கியமானதொரு காரணியாகும்.

அடிக்கடி நில அதிர்வுகளை எதிர்கொள்ளும் இடுக்கி மாவட்ட எல்லையில் ஆய்வகம் அமைகிறது என்பது பற்றி, குகைகளைக் குடையப் பயன்படுத்தப்படும் 1 லட்சம் கிலோ ஜெல்லட்டின் வெடிகளால், ஆய்வகப் பகுதியில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ள இடுக்கி அணை, 49 கி.மீ. தொலைவில் உள்ள முல்லைப்பெரியாறு அணை பாதிக்கப்படுமா என்பது பற்றி, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பரிசீலிக்கவில்லை. மாறாக, மழைக்காடுகளைக் கொண்ட அப்பகுதியை ஆண்டிற்கு 1000 மி.மீ. குறைவான மழைப்பொழிவை மட்டுமே கொண்டதாக, குட்டையான புதர்காடுகளை மட்டுமே கொண்டதாக சித்தரித்துள்ளது.

இந்தத் திட்டம், புவியியல்ரீதியாக, உயிரியல் ரீதியாக, கதிரியக்க ரீதியாக மானுடத்திற்கும், இயற்கைக்கும் கேடானது. இத் திட்டத்திற்காக 4 ஆண்டுகளில் அகற்றப்படும் 8 லட்சம் டன் பாறைகள், வெடிவைத்து தகர்க்கப் பயன்படுத்தப்படும் 1 லட்சம் கிலோ ஜெல்லட்டின்கள், சுற்றுச் சூழலியல் ரீதியாக எளிதில் சேதமுறுகிற மண்டலமான மேற்கு மலைத் தொடரில் நில நடுக்கங்களை  தூண்டும்; மாசுபடுத்தும். 400 கோடி கன மீட்டர் தண்ணீரை தேக்கி வைத்துள்ள கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள 12 அணைகளைப் பாதிக்கும்; 2018ல், திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், அமெரிக்காவின் சிகாகோ ஆய்வுக் கூடத்திலிருந்து (ஃபெர்மி லேப்) தயாரிக்கப்பட்டு போடி ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் உயர் சக்திமிக்க நியூட்ரினோ கற்றை இந்திய ஆய்வகத்தின் சுற்றுப்புறத்தில் கதிர்வீச்சையும், கழிவுகளையும் ஏற்படுத்தும்; சுமார் 50 லட்சம் தமிழக, கேரள மக்களின் வாழ்வுரிமையில் பாதிப்பை ஏற்படுத்தும். பல்லுயிர் பெருக்கத்திற்கு, தாவரங்களுக்கு, காட்டு உயிர்களுக்கு, கேடுகளை உருவாக்கும். மேற்குத் தொடர் மலைகளை பேராபத்திற்குள் தள்ளும்.

எதிர்ப்புகள்

ஆய்வுக் கூடத்திற்கு நெருக்கமான நான்கு ஊராட்சிகளை (பொட்டியாபுரம், தேவாரம், சங்கராபுரம், ராசிங்கபுரம்) சேர்ந்த மக்களின் பெரும்பான்மையினர் விவசாயத்தை நம்பி உள்ளனர். ஆய்வுக்கூட கட்டுமானப் பணிகளால் சுற்றுச் சூழல் மாசுபடும், நீராதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும், அணைகளும் சேதமுறும் என விவசாயிகள் கருதுகின்றனர். அணுக் கழிவுகளைப் புதைப்பதற்கான சுரங்கம் தோண்டப்படுகிறது என்ற அய்யமும் மக்களிடம் எழுந்துள்ளது. 2011ல் திட்டத்திற்காக நிலத்தை சர்வே செய்தபோது மக்கள் அணி திரண்டு முழுக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்த நான்கு ஊராட்சித் தலைவர்களும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு மிரட்டப்பட்டனர். 2012ல் ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மீதும் பணிகளை தடுத்ததாக வழக்கு போடப்பட்டுள்ளது. கிராம மக்கள் ஆடுமாடு களை மேய்ப்பதற்கும், புற்களை அறுப்பதற்கும், காய்ந்த விறகுகளை சேகரிப்பதற்கும் இந்த மலைப் பகுதிகளை சார்ந்து இருந்தனர். தற்போது ஆடுமாடுகளை, மனிதர்களை மலைப்பகுதிக்குள் அனுமதிப்பதில்லை.

இந்தப் பிரச்சனை சுற்றுச் சூழல் மட்டும் சார்ந்த பிரச்சனையாகவோ, விவசாயிகள் பிரச்சனையாகவோ மட்டும் புரிந்துகொள்ளப்பட்டு விடக்கூடாது. பல்வேறு அணுசக்தி, ஆயுத பொருளாதார கூட்டு ஒப்பந்தங்கள், திட்டங்கள் மூலமாக மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக மாறுவதற்கு விரும்புகிறது. ஆயுதங்கள், அணு போன்ற கேந்திரமானத் துறைகளில் அமெரிக்கா நுழைவதற்கு பல வாய்ப்புகளை வழங்குகிறது; அமெரிக்காவின் அணு ஆயுத வகைப்பட்ட ஒரு ரகசிய திட்டத்திற்கு, இந்திய நியூட்ரினோ ஆய்வுக் கூடம் வாயிலாக ஆபத்தான பாதையை அமைத்துத் தருகிறது; மக்களின் வாழ்வோடும் தேசத்தின் இறையாளுமையோடும் விளையாடுகிறது. விவசாய சமூகத் தோடு, ஜனநாயக, நாட்டுப்பற்றுள்ள அனைவரும் ஒன்றுபட்டு, மோடி அரசு முன்னகர்த்துகிற நியூட்ரினோ ஆய்வுக் கூட நாசகர திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

 

Leave a Response