
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக – பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
இந்தக் கூட்டணியில் அன்புமணியின் பாமக,டிடிவி.தினகரனின் அமமுக ஆகிய கட்சிகள் கைக்கோத்துள்ளன.
கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில், தேசிய சனநாயகக் கூட்டணியின் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நாளை (சனவரி 23,2026) நடைபெற உள்ளது.
அந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார்.
அதற்காக, நாளை பிற்பகல் 1.15 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார் பிரதமர் மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்கிறார். மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் முடிந்த பின், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனிவிமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்படுகிறார்.
பிரதமர் வருகையின்போது கூட்டணியை முழுமையாக்கி அனைத்துத் தலைவர்களையும் மேடையேற்றிவிடுவது என்று பாஜக தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.
ஆனால் அவர்கள் விரித்த வலையில் வழக்குகள் இருக்கும் அன்புமணியும் டிடிவி.தினகரனும் மட்டுமே சிக்கினர். ஓபிஎஸ், மருத்துவர் இராமதாசு, பிரேமலதா ஆகியோர் கேட்டது கிடைக்காததால் இணங்கிவர மறுக்கின்றனர்.
நாளை மதியம் பிரதமர் வருவதற்குள், இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எல்லோரையும் மேடையேற்றிவிட வேண்டுமென்று இறுதிக்கட்ட முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயல்.
இவர்கள் மூவரையும் இழுக்க இரவு பகலாகத் தொடரும் இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவு என்னவாகும்? என்பது நாளை மாலைதான் தெரியும்.அதுவரை அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் என்கிறார்கள்.
என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.


