
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு,இந்தக் கூட்டணியில் அன்புமணி இணைந்தார்.இன்று அக்கூட்டணியில் டிடிவி.தினகரன் இணைந்துள்ளார்.
இவற்றிற்குக் காரணம் என்ன என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னிஅரசு வெளிப்படுத்தியுள்ளார்.
அவருடைய பதிவில்…
இரட்டை இலை பெறுவதற்கு இலஞ்சம் கொடுத்ததாக பதியப்பட்ட வழக்கில், டிடிவி தினகரனின் மேல்முறையீட்டு மனு வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அதே போல,மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தது தொடர்பான அன்புமணி ராமதாசு மீதான ஊழல் வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் அன்புமணியின் மேல்முறையீட்டு மனு மார்ச் 16 வருவதால், சிபிஐ வழக்கில் அடுத்த விசாரணை மார்ச் 28 இல் வருகிறது.
திரு.அன்புமணி ராமதாசு அவர்களுக்கும் திரு.தினகரன் அவர்களுக்கும் மேல் முறையீட்டு வழக்குகள் உள்ளன.
இந்த வழக்குகளில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட வேண்டுமானால்,பாஜக என்ன உத்தரவிடுகிறதோ?
அந்த உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டும்.
கூட்டணிக்காக சிபிஐ அமைப்பை மட்டுமல்ல,நீதிமன்றங்களையும் பாஜக பயன்படுத்தும் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
வரும் 23 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வரவிருப்பதால் அதற்குள் கூட்டணி முடிவுக்கு வருமா?
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
சிபிஐ உள்ளிட்ட அரசாங்க அதிகார அமைப்புகளை தன்னுடைய சுயநலனுக்காக பாஜக பயன்படுத்துகிறது என்றும் அந்த சட்டவிரோதத்தைத் தொடர்ந்து செய்துவருகிறதென்றும் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வண்ணம் வன்னிஅரசுவின் கருத்து உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் சொல்கின்றனர்.


