
வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இது இன்று காலை மேலும் வலு குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது….
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழ்நாடு – புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் நேற்று நிலை கொண்டிருந்தது. அப்போது புயலுக்கும், வடதமிழ்நாடு கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 70 கி.மீ. ஆக இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு கடலோரப் பகுதியை ஒட்டி நகர்ந்த டிட்வா புயல், சென்னையில் இருந்து 140 கி.மீ. தொலைவில் வந்தபோது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. அப்போது வட தமிழ்நாடு கரையை ஒட்டி 80 கி.மீ. தொலைவில் நிலவியது. இது தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்கிறது. இது இன்று (டிசம்பர் 1) காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறைய வாய்ப்பு உள்ளது. அப்போது, வட தமிழ்நாடு கரையை ஒட்டி 20 கி.மீ. தொலைவில் நிலவும்.
இதன் காரணமாக இன்றும், நாளையும் (டிசம்பர் 1, 2) தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 3 முதல் 6 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் இலேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகள், தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து கொண்டேயிருக்கிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


