செங்கோட்டையனை நீக்கியது ஏன்? – எடப்பாடி விளக்கம்

ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்றத் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது….

இந்தத் தொகுதியில்(கோபி) எம்எல்ஏ.வாக நீங்கள் தேர்ந்தெடுத்த நபர்(செங்கோட்டையன்) வாக்குக்காக உங்களைத் தேடி வந்தார். ஆனால் ராஜினாமா செய்ய அனுமதி கேட்டாரா?. கவலைப்பட வேண்டாம் அதிமுக ஆட்சி வந்தவுடன் எடப்பாடி தொகுதியை விட கோபிசெட்டிபாளையம் தொகுதி வளர்ச்சி பெறும்.

இந்தப் பகுதியில் இருக்கும் ஒருவர்(செங்கோட்டையன்)பற்றிச் சொல்ல வேண்டும். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் பாராட்டு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் இடம் பெறாததால் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார். இப்போது யார் படத்தை வைத்துக் கொண்டு மாற்று கட்சியில் இணைந்தீங்க?. அதிமுக கட்சி தான் அவரை அடையாளம் காட்டியது, அவருக்குப் பதவி கொடுத்தது அதிமுக தான்.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறி ஏற்கனவே நீக்கப்பட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். அதையும் நாங்கள் கண்டுகொள்ளாமல் தான் இருந்தோம். அவருக்கு உண்டான மரியாதையைக் கொடுத்தோம். ஆனால், அவர் திருந்தவில்லை. அதற்கு மாறாக மனம் திறந்து பேசுகிறேன் என கூறி பேட்டி அளித்து, கட்சியை எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைக்கவில்லை என்றால் நான்(செங்கோட்டையன்) முன்னின்று ஒருங்கிணைப்பதாகக் கூறி கட்சித் தலைமைக்கு 10 நாள் கெடு விதித்தார். அப்படிப்பட்டவரை எப்படி இயக்கத்தில் தொடர அனுமதிக்க முடியும். இதனால், அதிமுக அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கி உள்ளோம்.

கட்சியில் இருந்து கொண்டு அதிமுக ஆட்சிக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, திட்டமிட்டு அவர்களை (வைத்தியலிங்கம் போன்றவர்கள்) வெளியேற்றிவிட்டு இவர் கட்சிக்குள் இருந்தார். இப்போது என்ன ஆச்சி. என்றைக்கும் நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்டது செய்தால்? இந்த இயக்கத்திற்கு யார் துரோகம் செய்தாலும் ஆண்டவர் பார்த்துக் கொள்வார். நான் திறந்த மனம் கொண்டவன். நான் உங்களில் ஒருவனாக நின்று கொண்டிருக்கிறேன். நான் இன்றைக்கும் தொண்டன். இவரைப் போல (செங்கோட்டையன்) சுயநலவாதி இல்லை.

தற்போதுள்ள சோதனைகளைக் கடந்து, அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் முதல் வெற்றி விழாக் கூட்டத்தை கோபி தொகுதியில் நடத்துவோம். இப்போது செங்கோட்டையன் மாற்றுக் கட்சியில் இணைந்துள்ளார். அவர் எங்கிருந்தாலும் வாழ்க. போனவர் சும்மா இருந்தால் பரவாயில்லை. ஆனால் தூய்மையான ஆட்சி கொடுப்போம் என்று சொல்கிறார். ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சி செய்தபோது நீங்கள் அமைச்சராக இருந்தவர். ஏன் எனது தலைமையிலான ஆட்சியிலும் அமைச்சராக இருந்தார். அப்போது தூய்மையான ஆட்சி கொடுக்கவில்லையா?. நல்லாட்சி கொடுக்கவில்லையா?. துண்டு மாற்றியதால் அவரது கருத்து மாறிவிட்டது. எந்தக் கொம்பனாலும் அதிமுக.வை வீழ்த்த முடியாது.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

Leave a Response