உயிரிழந்தோர் வீட்டுக்குப் போகமாட்டீர்களா? – விஜய்க்கு சேரன் சூடு

செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடந்த நடிகர் விஜய்யின் தேர்தல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு நடந்தது.

ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்த அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக விஜய்யும் அவரது கட்சியும் நடந்துகொள்ளவில்லை என ஏராளமான விமர்சனங்கள் வந்தன.

இதனால், விரைவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூற விஜய், கரூர் செல்லவிருக்கிறார் என்றும் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறாமல் அவர்கள் எல்லோரையும் ஒரு விடுதிக்கு வரவழைத்து அங்கு சந்திக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதுவும் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

இயக்குநர் சேரன் இதுகுறித்து,

உயிர் இழந்தவர்கள் குடும்பங்களைக் கூட வரவைச்சுத்தான் ஆறுதல் சொல்லுவிங்களா சார்… ரொம்ப தவறா இருக்கு விஜய், நேர்ல ஒவ்வொருவர் வீட்டுக்கு போறதுதான மரியாதை.. அப்போதான உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் களங்கம் விலகும். அது முடியாதுன்னா எதுக்குமே உங்களால மக்களோட நிக்கமுடியாது.

என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் விஜய்யை வைத்து சச்சின் என்கிற படத்தை இயக்கியவரும் இயக்குநர் மகேந்திரனின் மகனுமான ஜான் மகேந்திரன் ஒரு பதிவை வெளியிட்டார்.அதில்,

மிகவும் முதிர்ச்சியற்ற மற்றும் நடைமுறைக்கு மாறான ஆலோசனை. அவர் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றால் ஏற்படும் குழப்பத்தை கற்பனை செய்து பாருங்கள் என்று கூறியிருந்தார்.

இதற்கு விடையளித்து இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள பதிவில்,

ஒரு தலைவன் எப்பவும் என் பக்கத்துல வந்து எனக்காக நிப்பான்ற நம்பிக்கை உருவாக்கணும்.. முடியலைன்னா அத வளர்த்துக்கணும்..
இரசிகர் மன்றம் இருக்கவரை யாரும் கேட்கலை. எங்களை எப்போ ஆளணும்னு வர்றிங்களோ அப்போதான் இந்த கேள்வி. நல்லது சொல்ல கூட இருங்க .. தவறா சொல்லி ஏத்திவிட வேண்டாம்.

என்று கூறியிருக்கிறார்.

நடிகர் விஜய் பொதுவெளியில் ஏராள விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார் என்றாலும் அதே அளவு கோபத்துடன் இயக்குநர் சேரன் அவரைப் பற்றிப் பேசியிருப்பது பெரிதும் கவனத்துக்கு ஆளாகியிருக்கிறது.

இதனால்,வெகுமக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார் என்று சொல்லி பெரும்பாலோனோர் இயக்குநர் சேரனை ஆதரித்துப் பேசிவருகிறார்கள்.

Leave a Response