
தமிழ்நாட்டில் 2026 இல் பாஜக அங்கம் வகிக்கும் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமையும். தமிழ்நாட்டில் 2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி.
அதிமுக விவகாரங்களில் தலையிடவில்லை என்றும் அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க தான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அக்கட்சி விவகாரங்களை அவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டும்.
அதிமுக தலைமையின் கீழ் தாங்கள் போட்டியிடுவதால், அக்கட்சியை சேர்ந்தவர்களே முதலமைச்சர் ஆவார்கள்.
அண்மையில் ஒன்றிய உள்துறை அமித்ஷா கொடுத்த இந்த நேர்காணல் தமிழ்நாடு அரசியலில் பலத்த் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்தவர்களே முதலமைச்சர் என்று அமித்ஷா பொத்தாம் பொதுவாகக் கூறியதுதான் விவாதத்துக்குக் காரணமாகியுள்ளது.
ஏனெனில் அதிமுகவின் பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் எனப்பல பொறுப்புகளை வைத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பெயரைக் குறிப்பிடாமல் அதிமுகவைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனால்,பாஜகவுடன் தேர்தல் கூட்டணி கிடையாது என்று எடப்பாடி பழனிச்சாமி பேசிவந்த நேரத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை வைத்து அவருக்கு நெருக்கடி கொடுத்து கூட்டணியில் சேர்த்தது பாஜக.
அதனால், செங்கோட்டையனையே முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என பாஜக விரும்புகிறது அதனால்தான் எடப்பாடி பெயரை அமித்ஷா சொல்லவில்லை என்று சிலர் சொல்கிறார்கள்.
முன்னாள் முதலமைச்சர் என்கிற தகுதியுடனிருக்கும் ஓ.பன்னீர்செல்வம்,எடப்பாடியை விட பாஜகவுக்கு விசுவாசமாக இருக்கிறார் என்பதால் அவரையே முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கத் திட்டமிடுகிறார்கள்.அதனால்தான் எடப்பாடி பெயரைச் சொல்லவில்லை என்று சிலர் சொல்கிறார்கள்.
இவ்விருவர் தவிர இன்னொரு பெயரும் தற்போது அடிபடுகிறது. அது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயர்தான்.
அதிமுக பாஜக கூட்டணி அமைய முழுமூச்சாகப் பாடுபட்டவர் அவர்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி.அதனால் அவரையே முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கலாம் என பாஜக நினைக்கிறது.அதன் வெளிப்பாடுதான் அண்மையில் ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் தம்பியிடன் சென்று எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டது என்று சிலர் சொல்கிறார்கள்.
இப்படிச் சொல்வதெல்லாம் அதிமுகவிலிருப்போர்தான் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
இவற்றிலிருந்து முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை பாஜகவே முடிவு செய்யும் என்கிற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.
இது அதிமுகவுக்கு நல்லதல்ல.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுகவை நம்பித்தான் பாஜக இருக்கவேண்டுமே தவிர பாஜகவை நம்பி அதிமுக இல்லை.நம் கட்சிக்குள் இருக்கும் பிளவைப் பயன்படுத்தி பாஜக நாட்டாமை செய்ய நினைக்கிறது.தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து அதிமுகவினர் ஒருங்கிணைந்து இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்பது உண்மையான அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அர்த்தமுள்ள இந்த எதிர்பார்ப்புக்குத் தலைவர்கள் செவிமடுப்பார்களா? செவிமடுக்கவேண்டும்.


