நத்தம் விஸ்வநாதன் – எல்.முருகன் எதிரெதிர் கருத்து – தொண்டர்கள் குழப்பம்

அதிமுக பாஜக கூட்டணி அமைந்தாலும் முதலமைச்சர் வேட்பாளர் யார்? தனிக்கட்சி ஆட்சியா? கூட்டணி ஆட்சியா? என்கிற விவாதங்கள் வேகமாக நடந்துவருகின்றன.

நேற்றும் அது தொடர்ந்தது.

திண்டுக்கல் அதிமுக கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, அதிமுக துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் தலைமை வகித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது….

அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும். திமுகவுக்கு மாற்றாக அதிமுக தான் இருக்கிறது என சாதாரண மனிதர்களுக்கும் தெரியும். அதிமுக தலைமையிலான கூட்டணி என்றுதான் அமித்ஷா கூறியுள்ளார்.
எடப்பாடி தான் சீட்டு கொடுப்பது உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுப்பார். அதிமுக என்றால் எடப்பாடி. எடப்பாடி என்றால் அதிமுக என்பது அமித்ஷாவிற்கு தெரியும். கூட்டணி ஆட்சி இல்லை என எடப்பாடி தெளிவாகக் கூறியுள்ளார். அவர் சொல்வதுதான் இறுதி முடிவு. அதிமுகவுடன் தவெக இணைய வாய்ப்புள்ளதா என்றால், அரசியலில் என்ன நடக்கும் என்று ஜோசியம் சொல்ல முடியாது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எந்தக் கட்சி எங்கு வேண்டுமானாலும் வரலாம். போகலாம். அதிமுகவில் எதிர்பாராத கட்சிகள் கூட்டணிக்கு வந்து சேரும்.

இவ்வாறு தெரிவித்தார்.

நத்தம் விஸ்வநாதன் இப்படி சொல்லியிருக்கும் அதேநேரம், ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் இதுதொடர்பாகக் கூறியதாவது….

தமிழ்நாட்டில் அதி​முக தலை​மை​யில்​தான் தேசிய ஜனநாயகக் கூட்​டணி இயங்​கும் என்று அமித்ஷா கூறி​விட்​டார். தமிழ்நாட்டில் கூட்​டணி ஆட்சி குறித்​தும், முதலமைச்சர் வேட்​பாளர் குறித்​தும் அமித்​ஷா​வும், அதி​முக பொதுச் செய​லா​ளர் எடப்பாடி பழனிச்​சாமி​யும் பேசி முடி​வெடுப்​பார்​கள். இதில் நான் கருத்துக் கூற முடி​யாது.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

இவற்றில் நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமியே எல்லா முடிவுகளையும் எடுப்பார் என்று சொல்லியிருக்கிறார். எல்.முருகனோ,அமித்ஷாவும் எடப்பாடி பழனிச்சாமியும் சேர்ந்து முடிவெடுப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

இப்படி இருவேறு கருத்துகள் நாள்தோறும் வந்து கொண்டிருப்பதால் அதிமுக தொண்டர்கள் கடும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.இப்படியே தொடர்வது பெரும் தோல்விக்கு வழிவகுக்கும் என்று வருத்தப்பட்டுச் சொல்கின்றனர்.

Leave a Response