முதலமைச்சர் வேட்பாளர் செங்கோட்டையன்? – அமித்ஷா கருத்தால் பரபரப்பு

2026 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்துள்ளார்.

அதில்…

தமிழ்நாட்டில் 2026 இல் பாஜக அங்கம் வகிக்கும் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமையும். தமிழ்நாட்டில் 2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி. கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்விக்கு தேர்தல் நேரத்தில் அனைத்தும் தெளிவாகும் என பதில் அளித்துள்ளார்.

அதிமுக விவகாரங்களில் தலையிடவில்லை என்றும் அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க தான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். அக்கட்சி விவகாரங்களை அவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி பெயரைக் கூறாமல், அதிமுக தலைமையின் கீழ் தாங்கள் போட்டியிடுவதால், அக்கட்சியை சேர்ந்தவர்களே முதலமைச்சர் ஆவார்கள் என்று பதிலளித்துள்ளார்.

அமித்ஷாவின் இந்தப் பதில் தமிழ்நாடு அரசியலில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி பெயரை அமித்ஷா தவிர்த்த நிலையில் அதுகுறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி,

அமித்ஷா எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பது எனக்குத் தெரியாது. தமிழ்நாட்டில் தே.ஜ.கூட்டணியின் தலைவர் எடப்பாடிதான். அவர் சொல்வதே இறுதி முடிவு. கூட்டணி குறித்த எந்த முடிவு என்றாலும் அது எடப்பாடி பழனிச்சாமிதான் அறிவிக்க வேண்டும். தே.ஜ.கூட்டணியின் “கட்டளை தளபதி” எடப்பாடி பழனிச்சாமிதான் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பெயரைச் சொல்லாமல் அதிமுகவைச் சேர்ந்தவரே முதலமைச்சராவார் என்று சொன்னதால் மீண்டும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியில் வந்துள்ளார்.

கே.ஏ.செங்கோட்டையனை முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்து அதிமுக பாஜக கூட்டணி தேர்தலில் போட்டியிடும் என்று சமூகவலைதளங்களில் கருத்துகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.இதை அதிமுகவைச் சேர்ந்த சிலரே பதிவிட்டுவருவதால் இக்கருத்து பேசுபொருளாகியிருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response