
ஆடி மாதம் 18 ஆம் தேதியை ஆடிப்பெருக்கு, பதினெட்டாம் பெருக்கு என்று அழைக்கின்றனர்.
பொதுவாக இந்து சமய விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.
தென்மேற்குப் பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.
இந்நாளில், மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள்.
பெண்கள், தங்கள் தாலிகளைப் பிரித்துக் கட்டிக்கொள்வார்கள்.
மேட்டூர், பவானி கூடுதுறை,ஈரோடு,பரமத்தி-வேலூர்,குளித்தலை,திருச்சி,
பூம்புகார் உள்ளிட்ட காவிரிக் கரையோர நகரங்களில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் அடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம.
ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தினர் நாமக்கல், சேலம் மற்றும் ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவதும் வழக்கம்.
இவ்வாண்டு மேட்டூர் அணை நிரம்பி காவிரி நிறைந்து வழிந்து ஓடுவதால் மக்கள் மகிழ்ச்சியுடன் ஆடிப்பெருக்கைக் கொண்டாடுகின்றனர்.


