
சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த அரசியல் கட்சிகளும் திரையுலகினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால், சமீபத்தில் சென்னை போட்டிகளை புனே மைதானத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்தது.
இந்த நிலையில் நாளை புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்தப் போட்டியைக் காண சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சுமார் ஆயிரம் பேர் சிறப்பு ரயிலில் புனேவுக்கு பயணம் செய்தனர். இதற்காக அவர்கள் ரயில்வே நிர்வாகத்திடம் பேசி சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை அணி ரசிகர்கள் மன்றம் ஏற்பாடு செய்த ரயிலில் சென்னை சிஎஸ்கே ரசிகர்கள் சிஎஸ்கே அணியின் மஞ்சள் உடையுடன் ரயிலில் சென்றுள்ளனர்.
புனேவில் போட்டி நடப்பதால் சென்னை அணி விளையாடும்போது கொடி காட்டவும் உற்சாகப்படுத்தவும் யாரும் இருக்கமாட்டார்கள். அத்னால், ஆயிரம் பேருக்கு பயணச்செலவு உணவுச்செலவு ஆகியனவற்றை நாங்களே செய்கிறோம், நீங்கள் வந்து போனால் போதும் என்று சொல்லி அழைத்துச் சென்றிருக்கிறார்களாம்.
அரசியல் கட்சிகள் கூட்டத்துக்குப் பணம் கொடுத்து ஆட்களைச் சேர்ப்பது போல விளையாட்டுப் போட்டிக்கும் நடக்கிறது. விளையாட்டு விளையாட்டாக இல்லாமல் வியாபாரமானதால் இந்நிலை என்று சொல்லி வருத்தப்படுகிறார்கள் விளையாட்டுப் பிரியர்கள்.


