
மொகாலியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.
டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
லோகேஷ் ராகுல், கிறிஸ் கேல் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நிதானமாக ஆடிய லோகேஷ் ராகுல் 21 பந்தில் 18 ஓட்டங்கள் நிலையில், ரஷித் கான் சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மயான்க் அகர்வால் (18 ஓட்டங்கள்) விரைவாக ஆட்டமிழந்தார்.
பின்னர், கிறிஸ் கேல், கே.கே.நாயர் ஜோடி சேர்ந்தனர். ஆரம்பத்தில் பொறுமையாக ஆடிய கேல், போகப் போக தனது அதிரடியை காட்டினார். கே.கே.நாயர் நல்ல ஒத்துழைப்பு தர கேல் 39 பந்தில் அரைசதம் கடந்தார். அதன் பின் அவரது அனல் பறக்கும் சிக்சர்கள் ஆரம்பித்தன. ரஷித்கான் வீசிய 14வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்சர்களை விளாசினார் கேல்.
அதைத்தொடர்ந்து 58 பந்தில் சதம் அடித்தார். ஐபிஎல்லில் இந்த சீசனில் அடிக்கப்படும் முதல் சதம் இது. 3வது விக்கெட்டுக்கு 85 ஓட்டங்கள் சேர்ந்திருந்த நிலையில் கே.கே.நாயர் (31 ஓட்டங்கள்) ஆட்டமிழந்தார்.
கிங்ஸ் லெவன் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன் சேர்த்தது. கேல் 63 பந்தில் 104 ரன்களுடனும் (11 சிக்சர், 1 பவுண்டரி), ஆரோன் பிஞ்ச் 14 ரன்னுடனும் (6 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பின்னர், 194 ஓட்டங்கள் எடுத்தால்் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பில் களமிறங்கிய சாகா 6 ரன்னில் ஆவுட் ஆக, மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ஷிகார்தவான் ரிடையர்ட் ஹர்ட் முறையில் களத்தில் இருந்து வெளியேறினார். அதை தொடர்ந்து களமிறங்கிய வில்லியம்சன் 41 பந்தில் 54 ரன் எடுத்து அவுட் ஆனார்.
கடைசிவரை போராடிய மணிஷ்பாண்டே 42 பந்தில் 57 ரன்னும், ஷகிப் ஹல் ஹாசன் 12 பந்தில் 24 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். எனினும் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் 178 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
