மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு – திணறும் தமிழக அரசு

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. இந்த விவகாரம் பற்றி ஆலோசிக்க, தி.மு.க., சார்பில், நேற்று (ஏப்ரல் 1,2018) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.

சென்னை, அறிவாலயத்தில் நடந்த இந்தக் கூட்டம் முடிந்ததும், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், வள்ளுவர் கோட்டம் சென்றார். அதற்கு முன், வள்ளுவர் கோட்டத்திற்கு வெளியே உள்ள, திறந்தவெளி பூங்காவில், ஏராளமான, தி.மு.க.வினர் குவிந்திருந்தனர்.

அவர்கள், பூங்காவில் உள்ள அண்ணா சிலை அருகே, திடீரென ஆர்ப்பாட்டத்திற்கான மேடை அமைத்தனர். ஸ்டாலின் அங்கு வந்ததும், அவருடன் சேர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, மத்திய அரசைக் கண்டித்து திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், வரும், 5ம் தேதி, முழு அடைப்புப் போராட்டம் நடப்பதால், போக்குவரத்து நிறுத்தப்படும். ரயில் மறியலும் நடக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை, முன் அறிவிப்பில்லாத தொடர் போராட்டங்கள் நடத்தப்படும், இந்தப் போராட்டத்திற்கு, அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில், தி.மு.க வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து முடங்கியது.

ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதால், செயல் தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மற்றும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும், தி.மு.க தொண்டர்களைக் கைது செய்தனர்.

முன்னறிவிப்பின்றி ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடத்தியதோடு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இதுபோன்று முன்னறிவிப்பில்லாத போராட்டங்கள் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் சொல்லியிருப்பதால் தமிழக அரசும், காவல்துறையும் அதிர்ச்சி அடைந்திருக்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தடுமாறுவதாகத் தகவல்.

Leave a Response