காவிரி தீர்ப்பு – தமிழகத் தலைவர்கள் கருத்து தொகுப்பு

காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மு.க.ஸ்டாலின் (திமுக செயல் தலைவர்)

காவிரியில் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதிக்காத கர்நாடகத்துக்கு கூடுதல் நீர் கிடைத்துள்ளது நடுநிலையாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் சார்பில் தகுந்த ஆதாரங்களை முன்வைத்து வாதாடத் தவறிய அதிமுக அரசும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய பாஜக அரசும்தான் இதற்கு காரணம்.

காவிரி பிரச்சினையில் திமுக தலைவர் கருணாநிதி பெற்றுத் தந்த உரிமைகளை அதிமுக அரசு பறிகொடுத்துவிட்டது. காவிரி நீர் பங்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலையில், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் பழனிசாமி கூட்ட வேண்டும். அதில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு, தமிழக விவசாயிகளையும், பொதுமக்களையும் கடும் அதிர்சிக்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கி இருக்கின்றது. காவிரிப் பாசனப்பகுதிகளில் 13 லட்சம் ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுப் பயிர்கள் கருகி அழியும் நிலையில் இருக்கும்போது, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பேரிடியாக உள்ளது.

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் வளம் நன்றாக இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூறி இருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றது. பல ஆண்டுகளாகக் காவிரியில் தண்ணீர் இல்லாமல் தமிழகத்தின் நிலத்தடி நீர் காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களிலேயே 500 முதல் ஆயிரம் அடி வரை கீழே போய்விட்டது. தற்போது உச்சநீதிமன்றம் காலக்கெடு எதுவும் விதிக்காமல், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது வெறும் கண்துடைப்பு ஆகும். காவிரி நதி எந்த மாநிலத்திற்கும் சொந்தம் இல்லை என்று கூறுவதையும் ஏற்க முடியாது. தமிழக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, காவிரி நீர்ப் பங்கீடு பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்வது குறித்து விவாதிக்க வேண்டும்.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு:-

தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரின் அளவில் 14.74 டி.எம்.சி.யை குறைத்து விட்டது. உச்சநீதிமன்றத்தீர்ப்பின் இந்த அம்சம் மட்டும் மிக ஏமாற்றமளிக்கிறது. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதற்காக கூறப்பட்டுள்ள காரணங்களை ஏற்க முடியாது.

காவிரிப் பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்பு தான் இறுதியானது என்றும், இதை எதிர்த்து எந்த வகையிலும் மேல்முறையீடு செய்ய இயலாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போதுள்ள நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலைக் கணக்கில் கொண்டு அந்த மாநிலத்திற்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

எனவே, உச்சநீதிமன்றம் அளித்துள்ள அவகாசத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை சந்தித்து வலியுறுத்த தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

நதிகளை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்திற்கான தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது நமக்கு பாதகமான விஷயம். இந்த தீர்ப்பை எப்படி செயல்படுத்த போகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் தண்ணீர் திறக்க கோரியும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. கர்நாடகாவில் எந்த கட்சியின் ஆட்சி இருந்தாலும் தீர்ப்பை மதிக்க வேண்டும்.

காவிரி விஷயத்தில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோர்ட்டு உத்தரவிட்டும், மத்திய அரசு அமைக்கவில்லை. எனவே நமக்கான உரிமைகளை பெறுவது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டி விவாதிக்க வேண்டும்.

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த்:-

உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு தமிழகத்திற்கு குறைவாக தண்ணீர் கிடைக்கக்கூடிய வகையில் வழங்கப்பட்ட தீர்ப்பாகும். இந்த தீர்ப்பு தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-

தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகளின் உயிரைப்பற்றி கவலைப்படுவதை விட பெங்களூரு உலகத்தரம் வாய்ந்த நகரம் என்று சான்றிதழ் வழங்குவதற்கே நீதிமன்றம் முன்னுரிமை அளித்திருப்பது வேதனை அளிக்கிறது. ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக்கொள்வது உண்மையென்றால் காவிரியில் நமது உரிமையை நிலைநாட்ட அவரைப்போலவே உறுதியோடு இன்றைய முதல்-அமைச்சரும் போராடவேண்டும். தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை எதிர்த்து தமிழகத்தின் குரல் ஒன்றுபட்டு ஒலிக்க வேண்டும். அதற்கு உடனடியாக அனைத்து கட்சிகளின் கூட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் கூட்டவேண்டும்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்:-

காவிரி நதிநீரை ஆதாரமாகக் கொண்டு சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ள நிலையில், தொடர்ந்து குறைந்துவரும் மழைப்பொழிவு, நிலத்தடி நீர்மட்டம், நிச்சயமற்ற பருவநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல், நிலத்தடி நீராதாரத்தைக் காரணம் காட்டி உச்சநீதிமன்றம் தண்ணீரின் அளவை குறைத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இது தமிழகத்திற்கு தொடர் பாதிப்பை ஏற்படுத்தும். பல ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சினையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும், அதன் விளைவுகளையும் பரிசீலிக்க தமிழக அரசு அனைத்துக்கட்சி மற்றும் விவசாயிகள் இயக்கத் தலைவர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:-

காவிரி டெல்டா பகுதியில் சம்பா, குறுவை போன்ற பயிர்ச் சாகுபடிகள் சரிவர நடக்காமல் பாலைவனமாக அப்பகுதி மாறிடும் நிலையில், தவித்த வாய்க்குத் தாகம் தீர்க்கக் கூடிய அளவில் கூட தண்ணீர் தராதது மிகவும் ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக உள்ளது. ஆளுங்கட்சி, உடனடியாக அனைத்துக் கட்சிகள், சமூக, விவசாய அமைப்பினரைக் கூட்டி, ஒன்றுபட்ட ஒருமித்த குரலில் நமது நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றிட அனைத்து முயற்சிகளையும் செய்யவேண்டும்.

Leave a Response