அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவேன் -சிறை வாயிலில் மாணவி வளர்மதி உறுதி

தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் சேலம் மாவட்டப் பொறுப்பாளரும், பெரியார் பல்கலைக்கழக இதழியல் மாணவியுமான வளர்மதி, நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து, மக்களைப் போராட்டத்துக்கு தூண்டியதாகக் கைது செய்யப்பட்டார்.

கைது செய்து ஐந்து நாட்களுக்குப் பிறகு, வளர்மதியைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையர் (ஜூலை 17-2017) உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை மத்திய சிறையில் வளர்மதி அடைக்கப்பட்டார்.

அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி, வளர்மதியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மாணவர் வளர்மதி மீதான வழக்கில் எந்த சட்ட விதிமுறைகளையும் காவல்துறையினர் பின்பற்றவில்லை என்று கூறி, அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் இரத்து செய்தது. இதையடுத்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வளர்மதி செப்டம்பர் 7 ஆம் தேதி மாலையில் விடுவிக்கப்பட்டார்.

பெருந்திரளானோர் அவரைச் சிறை வாயிலில் வரவேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

மாணவி அனிதா தற்கொலை செய்துகொள்ளவில்லை. மத்திய, மாநில அரசுகளால் படுகொலை செய்யப்பட்டுவிட்டார். இனி ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர்கூட இதுபோன்ற முடிவை எடுக்காமல் இருப்பதற்காகத் தொடர்ந்து போராடுவோம். பெங்களூருவில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது.

என் மீது வழக்குகள் பதிவு செய்வதாலோ, சிறையில் அடைப்பதாலோ எனது போராட்டத்தை முடக்கிவிட முடயாது. நீட் உள்ளிட்ட மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு எதிராகவும், சமூக அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவேன். அடக்குமுறை எங்களை மேலும் வலிமையாக்குகிறது என்று உறுதிபடக் கூறினார்.

Leave a Response