சமரச விசயத்தில் ஒரே நாளில் ஓபிஎஸ் மாறியதற்கு இதுதான் காரணம்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.

அ.தி.மு.க.வுக்கு 2 அணி நிர்வாகிகளும் சொந்தம் கொண்டாடிய நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்னதாக அ.தி.மு.க.வும், அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையும் முடக்கப்பட்டது.

இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரி சோதனையில் சிக்கியதால் அவருக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து அவர்கள் நீக்க வலியுறுத்தியும், டி.டி.வி.தினகரன் அதனை ஏற்கவில்லை என்று சொல்லப்பட்டது.

இதனால், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற என்ன வழி என்பது குறித்து ஆலோசனை நடத்த தொடங்கினர்.

கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் காப்பாற்ற பிரிந்து சென்ற ஓ.பி.எஸ். அணியை தங்கள் அணியில் இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்தது.

இது தொடர்பாக மூத்த அமைச்சர்கள் ஓ.பி.எஸ்.சிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடக்கத்தில் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்று சொன்ன ஓபிஎஸ் இன்று, எந்த ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிலும் அதிமுக சென்று விடக்கூடாது.ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும்.நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்பது தவறாக புரிந்து கொள்ளபட்டு உள்ளது. எங்கள் அடிப்படை உரிமையில் எந்த மாற்றமும் இல்லை என்று பல்டி அடித்தார்.

இதற்கு என்ன காரணம் என்றால், பேச்சுவார்த்தையின் போது, எடப்பாடி தரப்பில்,

பெரும்பான்மை எம்எல்ஏக்கள் நம்மிடம் தான் இருக்கிறார்கள். முதல்வர் பதவியை இப்போதைக்கு மாற்ற வேண்டாம். டி.டி.வி.தினகரனை ஓரம் கட்டி விடுவோம். சசிகலாவிடம் உள்ள பொதுச் செயலாளர் பதவியை இப்போதைக்கு மாற்றம் செய்ய வேண்டாம். ஓ.பி.எஸ் இணைந்தால் அவர் நிதி அமைச்சர் பதவியில் தொடரலாம். மா.பா.பாண்டியராஜன், செம்மலை, மதுசூதனன் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வழங்கலாம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் போட்டியிட ஆதரவு என்றும் ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டதாம்.

இணைந்தால் மீண்டும் முதல்வர் பதவி கிடைக்கும் என்று நினைத்தே ஓபிஎஸ், பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாகவும் முதல்வர் பதவியிலிருந்து தாம் விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பிடிவாதமாக இருப்பதால்தான், மீண்டும் ஜெ மரணத்துக்கு நீதி வேண்டும் என்று ஓபிஎஸ் கிளம்பிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Response