‘எழுகதிர்’ ஆசிரியரும், எழுத்தாளருமான அருகோவின் 80–வது பிறந்தநாள், முத்துவிழாவாக சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் 22.11.2016 அன்று மாலை நடந்தது.
விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் ஆர்.சவுந்திரபாண்டியன் தலைமை தாங்கினார்.
தமிழர் உறவின்முறை சி.பா.அருட்கண்ணனார், மதுரை தமிழ்ப் பாதுகாப்புக்கழகம் புலவர் அரசுமணி, சந்திரேசன் குழுமம் சா.சந்திரேசன், தமிழ் விழிப்புணர்வுப் பாடல் வெளியீட்டுக் குழுமம் பாவலர் ஆர்.செம்பியன், கல்வியாளர் ஈசுவர வடிவுலிங்காலிங்கம், செந்தமிழ் விரும்பிகள் மாமன்றத் தலைவர் வீ.பா.செந்தமிழ் விரும்பி, ‘மின்னல் தமிழ்ப்பணி’ ஆசிரியர் சுப.சந்திரசேகரன், ஆடிட்டர்கள் கோபிநாராயணன், சொ.பாசுகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழர் களம் அரிமாவளவன், தமிழகப் புலவர் குழு மணிமேகலை கண்ணன், சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின் மகள் மாதவி பாஸ்கரன், தமிழ் தன்னுரிமை இயக்கத் தலைவர் மு.ராமச்சந்திரன், முனைவர் கு.அரசேந்திரன், ‘தென்மொழி’ ஆசிரியர் மா.பூங்குன்றன், தமிழர் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் க.அதியமான், மதுரை திருவள்ளுவர் இறைபணி மன்றம் ஆ.மீ.தமிழ்மகன், பாரதி–பாரதிதாசன் கவிதை அமைப்பு கவிஞர் திருவைபாபு மற்றும் கல்வியாளர்கள், புலவர்கள், சிந்தனையாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முத்துவிழாவில், ‘இன்றைய தமிழகம் அமைந்த நாள் விழா’, எனும் தலைப்பில் அருகோ பேசியதாவது:–
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரும், சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யும் இல்லை என்றால் இன்றைய தமிழகம் இருந்திருக்காது. தமிழகத்தில் சாதி, இன, மத, மொழி, கட்சி வாரியாக பிரிந்து இருந்தவர்களை, ‘நாம் தமிழர்’ என்று கூறி ஒன்று படுத்தியவர் அய்யா ஆதித்தனார். அவர் இந்திய விடுதலைக்கு முன்பு அதாவது 1942–ம் ஆண்டே தமிழர் ஒற்றுமைக்காக வித்திட்டு, ‘நாம் தமிழர்’ என்று முழக்கமிட்டார்.
அதேபோல பிரிந்து கிடந்த தாய் தமிழகத்தின் இணைக்கப்படாத பகுதிகளை ஒன்று சேர்த்து புதிய அகண்ட தமிழகத்தை அமைப்போம் என்று முதல் குரல் கொடுத்தவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.
மொழி வழி மாநில திட்டம் என்பதை மகாத்மா காந்தி முதன்முதலில் கொண்டுவந்தார். காந்தியின் திட்டப்படி இந்த நிலைமை மாறி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, ஆந்திரபிரதேச காங்கிரஸ் கமிட்டி, கேரளா காங்கிரஸ் கமிட்டி என்று மொழி வழி மாகாணங்களாக திருத்தி அமைக்கப்பட்டது. அப்போது சென்னையில் ஆந்திரா, கர்நாடக மற்றும் கேரளாவின் ஒரு பகுதி இணைந்திருந்தது. எனவே தனது இடத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் மொழி வழி போராட்டத்தை அந்த மாநிலங்கள் முன்னெடுத்தன. ஆனால் தமிழ் நில பகுதிகள் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தால் தமிழகத்தில் அந்த போராட்டம் நடக்கவில்லை.
அப்போது காங்கிரசில் சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த ம.பொ.சி., ‘அகண்ட தமிழகம்’ எனும் போராட்டத்தை முன்னெடுத்ததோடு, கட்சிக்குள் இருக்கும்போதே ‘தமிழரசுக் கழகம்’ எனும் துணை அமைப்பை ஏற்படுத்தி அதற்கான போராட்டத்தைத் தொடங்கினார். அண்டை மாநிலங்களில் காங்கிரஸ் நேரடியாக எல்லைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சென்னை மாகாணத்தில் உள்ள தமிழ்ப் பகுதிகள் பிரிந்தன.
சென்னையைக் கைப்பற்றி தனது மாநிலத் தலைநகராக ஆக்கவேண்டும் என்று ஆந்திர அரசு எண்ணியது. ‘தலையைக் கொடுத்தேனும் தலைநகரை மீட்போம்’ என்று ம.பொ.சி. சபதம் ஏற்று, போராடியதின் விளைவாக சென்னை காப்பாற்றப்பட்டு தக்கவைக்கப்பட்டது.
ம.பொ.சி.யின் எல்லாப் போராட்டங்களும் வெற்றி பெற அய்யா ஆதித்தனாரின் ‘தினத்தந்தி’ போன்ற பத்திரிகைகளே துணை நின்றன. அந்த பத்திரிகைகள் மூலமாக எழுச்சி பெற்ற தமிழர்கள் ஒன்றிணைந்து பறிக்கப்பட்ட திருத்தணியை ஆந்திராவிடம் இருந்து மீட்டனர், ‘யானை வாயில் இருந்து கரும்பை மீட்டது போல’.
மற்ற மாநிலங்களில் எல்லாம் அவரவர் மாநிலம் அமைந்த நாளை ‘ராஜ்யோத்சவ விழா’ என்று உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இருந்ததைக் காப்பதற்கும், இழந்ததை மீட்பதற்கும் அந்த மக்களிடம் அவர்கள் உணர்வேற்றி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் தமிழக அரசோ, மற்ற கட்சிகளோ இன்றைய தமிழகம் அமைந்த நாளை, அந்த தினத்தை கொண்டாட மறுப்பதால், தமிழ் இளைஞர்களிடம் தமிழ் உணர்வே அற்றுப்போய் வருகிறது. அது மாற வேண்டும்.
தமிழ் உணர்வை மீட்பதற்கு இந்த விழாவில் நாம் சூளுரை ஏற்போம். இதற்கு தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களும், அண்டை மாநில தமிழ் மக்களும் கூட்டாகக் குரல் கொடுக்க வேண்டும். அதற்காக நாம் போராடுவோம்.
வாழ்க ஆதித்தனார் – ம.பொ.சி. புகழ். வெல்க புதிய அகண்ட தமிழகம். இவ்வாறு அருகோ பேசினார்.
முன்னதாக விழாவில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் மற்றும் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. உருவப்படங்களை வரலாற்று ஆய்வறிஞர் குணா திறந்துவைத்து சிறப்புரை ஆற்றினார். அதனைத்தொடர்ந்து கவிஞர் சின்னப்பாண்டியன் குழுவினரின் தமிழ் எழுச்சி இசை நிகழ்ச்சி நடந்தது. விழாக்குழு செயலாளர் வெ.க.சந்திரமோகன் வரவேற்புரையும், தலைவர் பா.குப்பன் வாழ்த்துரையும், பொருளாளர் ஆதி.அறிவுடைநம்பி நன்றியுரையும் ஆற்றினர்.
தமிழக தமிழாசிரியர் கழக முன்னாள் தலைவர் கி.த.பச்சையப்பன் ரூ.3 ஆயிரம் மதிப்பில் ரூபாய் நோட்டுகளை மாலையாக அருகோவுக்கு அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவருடைய மனைவி கல்யாணிக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். விழாவுக்கு வந்திருந்தோர் பணமுடிப்பு, சால்வைகள் உள்ளிட்டவற்றை அருகோவுக்கு பரிசாக அளித்தனர். வாழ்த்த வந்த அனைவருக்கும் புத்தகங்களை நினைவுப்பரிசாக அருகோ அளித்து மகிழ்ந்தார்.