சுவாமிநாதன் எனும் பெயரை இறைக்குருவன் என்று மாற்றிய தூயதமிழ்ப்போராளியின் நினைவுநாள் இன்று

“தமிழ்த் தேசியப் போராளி” புலவர் இறைக்குருவனார் நினைவு நாள்
|23.11.2012|

மறைமலையடிகள் தொடங்கிய தனித்தமிழியக்கக் கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் ஏற்றுக்கொண்டு களமாடியவர்கள் மொழிஞாயிறு பாவாணரும், பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் ஆவார்கள். இந்த மூவரின் வழியில் தமிழியக்கக் கொள்கைகளை நெஞ்சிலேந்தி வாழ்ந்து மறைந்தவர்தான் புலவர் இறைக்குருவனார்

இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள தீவாமங்கலம் என்னும் சிற்றூரில் 2.4.1942இல் கோ.முத்தையா- மீனாட்சியம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு சுவாமி நாதன் எனும் பெயரிட்டனர். மறைமலையடிகளின் தூயதமிழ்க் கொள்கை ஏற்புக்குப் பின் இறைக்குருவன் என்று பெயரை மாற்றிக் கொண்டார்.

சிறுவயதில் திருக்குறள் முழுவதும் மனனம் செய்து ஒப்பிக்கும் ஆற்றல் பெற்றதோடு, தமிழ்ப்பாடல்கள் புனையவும் கற்றுக் கொண்டார். அண்ணாமலைப் பல்கலையில் புலவர் பட்டம் பெற்ற பிறகு, ‘தென்மொழி’ இதழ் மூலம் தமிழுணர்வைப் பரப்பினார்.

1969இல் பெருஞ்சித்திரனார் அவர்களின் மூத்த மகள் பொற்கொடி அவர்களை மணம் முடித்தார். தனக்குப் பிறந்த மழலைச் செல்வங்களுக்கு தமிழ்ச்செம்மல் என்றும், இசைமொழி என்றும், அங்கயற்கண்ணி என்றும் அழகிய தமிழில் பெயர் சூட்டினார். இறைக்குருவனார் மனுதர்ம நூல் எரிப்புப் போராட்டம், தமிழ்வழிக் கல்வி பரப்புரைப் பயணம், தமிழீழ விடுதலை ஆதரவுப் போராட்டங்களில் முழுமூச்சோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மொழிப்புரட்சி, சிலம்பிற் பிழையா?, பாவேந்தரும் தமிழும், திருக்குறள் நெறித் திருமணம், நல்ல தமிழ்ப் பெயர்கள், திருக்கோயில் வழிபாடு, தமிழரா? திராவிடரா? ஆகிய நூல்கள் இவர்தம் கைவண்ணத்தில் உருவான முதன்மையான நூல்களாகும். இவற்றுள் தமிழரா? திராவிடரா? எனும் சிறுநூல் இல்லாத திராவிட சித்தாந்தக் கொள்கையினை வெடி வைத்து தகர்க்கும் நூலாகும்.

அந்நூலின் சுருக்கிய வடிவத்தை பின்வருமாறு அறியத் தருகிறோம்.
தமிழரா, திராவிடரா?
திராவிடம் என்னுஞ் சொல் தமிழ்ச் சொல்லன்று, தமிழைக் குறிக்க ஆரியர் வழங்கிய தமிழின் திரிபான வடசொல். வடமொழியாளர் தமிழைத் திராவிடம் என்றமையால் வடபுலவாணர் நூல்களை முதன்மையாகக் கொண்ட வரலாற்றாசிரியர்களான ஐரோப்பியர் சிலரும் அவரையொட்டி இந்தியர் சிலரும் தமிழரைத் திராவிடர் என்றே குறிக்கலாயினர். இன்று தமிழ்நாட்டுத் தலைவர்கள் சிலர், வரலாற்றாசிரியர்கள் தமிழரைத் திராவிடர் என்று சுட்டியதாலேயே தாங்களும் அவ்வாறு குறிப்பிடுவதாகக் கூறிவருகின்றனர்.

சென்னை மாகாணமாய் இருந்த அற்றை நாளில் நான்மொழியாளரான மாகாண மக்களைத் திராவிடர் என்று குறிப்பது ஞாயம் போல் தோன்றினும் அது தொடர்பான பிறசெய்திகள் வேறுவகையாக இருக்கின்றன.

ஆதித்திராவிடர் என்னுஞ் சொல் நான்கு மொழியாளருள்ளும் தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்கும் பொதுப்பெயராகக் கொள்ளலாமேனும் தமிழரைத் தவிரப் பிறமொழியாளர்கள் எவரையும் அது தீண்ட வில்லை. அவர்களுள் தாழ்த்தப்பட்டோரெல்லாம் ஆதி ஆந்திரராகவும், ஆதி கருநாடகராகவும், ஆதி கேரளராகவுமே சுட்டப் பெற்றனர்.

அற்றை நிலையில் தாழ்த்தப்பட்ட தமிழ்மக்கள் யாரும் தங்களை ஆதித்திராவிடர் எனலாகாது என்றும் பழந்தமிழர் என்றே குறித்துக் கொள்ள வேண்டும் என்றும் பண்டித அயோத்திதாசர் எழுப்பிய குரல் எடுபடவில்லை. மாகாண ஆட்சிப்பொறுப்பில் இருந்த நயன்மை(நீதி)க் கட்சியாளரும், சீர்திருத்த நோக்குக்கொண்ட மக்கள் தலைவர்களும் தமிழரைத் திராவிடர் ஆக்குவதில் காட்டிய அக்கறையை ஏனைப் பிறமொழியாளரிடம் காட்ட வில்லை.

1940இல் திருவாரூரில் நடைபெற்ற தென்னிந்திய நலவுரிமைச் சங்க மாநாடொன்றில் அடுத்து வரும் குடிமதிப்புக் கணக்கெடுப்பின் போது “தென்னாட்டு மக்கள் தம்மைத் தமிழர் எனவும், தமிழ்நாட்டு மக்கள் எனவும் குறித்துக் கொள்ள வேண்டும்” என்று தூயதமிழ்க் காவலர்
அண்ணல் தங்கோ கொணர்ந்த தீர்மானத்தில் இடம் பெற்றிருந்த “தமிழர்-தமிழ்நாட்டு மக்கள்” என்பது தீர்மானப் பொருளாய்வுக் குழுவினரால் நீக்கப்பட்டு அவ்விடத்தில் “திராவிடர்” என்னும் சொல் சேர்க்கப்பட்டது. ஆனால், அண்ணல் தங்கோ தமிழர் தங்களைத் தமிழர் என்றே குறித்துக் கொள்ள வேண்டும் என்றும், தென்னாட்டவர் பிறர் விரும்பினால் தம்மைத் எவ்வாறேனும் குறித்துக் கொள்ளட்டும் என்றும் தீர்மானத்தை முன் மொழிந்து நிறைவேற்றினார்.

1944இல் சேலத்தில் நடைபெற்ற நயன்மைக்கட்சி மாநாட்டில் அமைப்பின் பெயரை மாற்ற முற்பட்ட போது அதைத் ‘தமிழர் கழகம்’ என மாற்ற வேண்டும் என்று அண்ணல் தங்கோவும் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் முதலானோரும் வலியுறுத்தினும் அது ஏற்கப்பட வில்லை. அண்ணாத்துரை தீர்மானத்தின் மூலம் திராவிடர் கழகம் என்றே மாற்றப்பட்டது.

தருக்கத்திற்காக, சென்னை மாகாணமாக இருந்த அன்றைய நிலையில் அது ஒருவாறு சரியானது என்றே வைத்துக் கொண்டாலும் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டு ஆந்திரம், கருநாடகம், கேரளம் என அவரவர்களுக்கு தனித் தனி மாநிலங்கள் அமைந்து இன்று அவரவர்களும் தனித் தனி தேசிய இனங்களாக தழைத்து வளர்ந்துள்ள நிலையில் தமிழ்நாடும் தனியான பின் திராவிடர்கள் எங்கே இருக்கிறார்கள்?

தெலுங்கர்களோ, கன்னடர்களோ, மலையாளிகளோ மறந்து கூட தம்மைத் திராவிடர் என்று கூறிக்கொள்வதில்லை. தமிழ்நாட்டில் உள்ள பிறமொழியாரை திராவிடர் என்னும் போர்வையில் தம்மை அமைப்பு வடிவப்படுத்திக் கொள்ளவும், கலவரம் செய்யவும் முற்படுகின்றனர்.

“மொழிவழி பிரிந்து இனவழி ஒன்று பட்டுத் திராவிட நாடு”….. என நீட்டி நிகழ்த்தப்பட்ட தி.மு.கழகத்தின் முழக்கம் தமிழக எல்லைக்கு அப்பால் நீளவில்லை. அண்டை அயல் மாநிலங்களில் வாழ்ந்த தமிழர்கள்தாம் ஆங்காங்குத் தி.மு.க.வுக்கு ஒன்றிரண்டு கிளைகள் அமைத்தனரேயன்றி அவ்வம் மாநிலத்து மக்கள் யாரும் தி.மு.க.வாக வில்லை.இங்கிருந்த தி.மு.க.வினர் யாரும் அத்தகைய முயற்சியில் தலைப்படவுமில்லை!

இனி, திராவிடநாடு திராவிடருக்கே என்னும் முழக்கம் தமிழ்நாடு தமிழருக்கே என்று மாறி, அதுவும் கைவிடப்பட்ட பின்னும், “அடைந்தால் திராவிடநாடு” ….. என்பது பழங்கதையாகிவிட்ட பின்னும், ‘திராவிட நாடு’ இதழ் ‘காஞ்சி’யாக மாறி அதுவும் நின்று விட்ட பிறகும் திராவிடத்தைப் பெயரளவில் விடாது பற்றிக் கொண்டிருப்பதேன்?

வடமொழிச் சொல்லாகவும் இன்றைய நிலையில் பிற தேசிய இனத்தாரையும் சேர்த்துக் குறிக்கும் பொருள் மயக்கங் கொண்டதாகவும் உள்ள திராவிடர் என்ற பெயரால் தமிழர்களை ஏன் குறிக்கிறீர்கள்; அமைப்பின் பெயரில் திராவிடத்தை நீக்கலாகாதா என்றால், ‘தமிழர் என்னும் போது, ‘தமிழ் பேசுகின்றமையால் நாங்களும் தமிழர்களே’ ஆரியப் பார்ப்பனர்கள் வந்து புகுந்து விடுவார்கள் என்கின்றனர். அவ்வாறானால் தமிழர் தலைவர் எனப்படுபவர் எந்தத் தமிழருக்குத் தலைவர்? ஆரியப் பார்ப்பனரும் உள்ளடங்குவர் எனப்படும் தமிழருக்கா, திராவிடருக்கா? தலைவர் தமிழர் தலைவராக இருக்கும் போது தொண்டர்களும் தோழர்களும் தமிழர்களாகத்தானே இருக்க முடியும்?

மக்கள் மன்றத்தில் திராவிடத்தை விட்டுவிட்டுத் ‘தமிழ்ப்பெருங்குடி மக்களே’ என்று விளிப்பதும், ‘தமிழா இனவுணர்வு கொள்’ என்று முழங்குவதும் தேர்தல் வரும் போது ‘தமிழா தமிழா’ என்று தாளந்தட்டிக் கொண்டு வருவதுமே நடைமுறையாக இருக்கும் இற்றை நாளிலும் பெயரளவில் திராவிடத்தைக் கொடிற்றுப் பிடியாக இறுகப் பற்றிக் கொண்டிருப்பதேன்?

‘திராவிடர் என்பது கொள்கைக் குறியீடு என்பவர்களும், நான் இனத்தால் திராவிடன் என்பவர்களும் ‘தமிழர் தலைவர்’ என்றும் ‘தமிழினத் தலைவர்’ என்றும் பட்டப்பூண்கள் கட்டிக் கொள்வதேன்? ‘திராவிடர் தலைவர்’ என்றும், ‘திராவிட இனத்தலைவர்’ என்றுந்தான் முழக்கம் எழுப்ப வேண்டும் என்று தத்தம் தொண்டர் படையினரையும், உடன்பிறப்புகளையும் நெறிப்படுத்த வேண்டியது தானே?

1938வாக்கில் தோன்றிய தமிழர் உணர்வு எழுச்சி, திராவிடத்தால் திசை திருப்பட்டமையால் தமிழர் இன்னமும் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்க வேண்டியுள்ளது.

திராவிடம் என்பது ஆரியத்துக்கு சார்பானதேயன்றி எதிரானதன்று என்பதும் உண்மையில் ஆரியத்துக்கு எதிரானது தமிழமே என்பதும் இந்தியம் என்பது ஆரியத்தை உள்ளீடாகக் கொண்ட அரசியல் ஆளுமை என்பதும் பிறவும் தெளியப்படும்.
தமிழ் மக்கள் எவ்வாற்றானும் திராவிடத்தை விட்டொழித்துத் தமிழர் என்றே தம்மைக் குறித்துக் கொள்ள வேண்டும்! தமிழ்த் தேசிய இனமாக உணர்ந்து எழுச்சி கொள்ள வேண்டும்!

-புலவர் இறைக்குருவனார்.
(தென்மொழியில் [சுவடி33, ஓலை12] இறைக்குருவனாரால் எழுதப்பட்ட இக்கட்டுரை சுருக்கி தரப்பட்டுள்ளது.)

Leave a Response