மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை?
தோப்பில் நிழலா இல்லை?
தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த்தெருவில்
தமிழ்தான் இல்லை
என்று வருந்திப் பாடினார் புரட்சிக்கவி பாரதிதாசன்.
அவர் பாடிப் பல்லாண்டுகளாகிவிட்டன.அந்த இழிநிலை இன்னும் தொடருவது மட்டுமின்றி மென்மேலும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.
தமிழ்நாட்டில் பேச்சிலும் எழுத்திலும் தமிழ் பல திரிபுகளைப் பெற்றது. தூய தமிழ் என்பது மிக அரிதாக ஆயிற்று. ஆங்கிலம் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் அளவற்றதாகி விட்டது. பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசவும் எழுதவும் பெரும்பான்மையான தமிழர்கள் எந்தவிதமான மறுப்பும் காட்டவில்லை. தமிழும் ஆங்கிலமும் கலந்த ஒரு பேச்சு வழக்கு உருவாயிற்று.
காசி ஆனந்தன் கூறுவது போலத் தமிங்கிலம் என்ற புதிய மொழியும் உருவாகிவிடும் சூழல் இன்றைய தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது.
இந்தி எதிர்ப்பு, தமிழ்வழிக் கல்வி முனைப்பு, தமிழிசை மன்றப் பணிகள், தமிழ் மக்கள் இசைவிழா, தமிழ் வழிபாட்டியக்கப் போர், தமிழ் ஆட்சிமொழி அறிவிப்பு, தமிழ்த் திருமணங்கள், சுயமரியாதைத் திருமணங்களும் குடும்ப நிகழ்வுகளும் எனப் பெருகிய முயற்சிகளெல்லாம் முழுதுமாகப் பயன் தந்தன எனக் கூற இயலவில்லை.
தன் பண்பாட்டின் மீது நிகழ்ந்த படையெடுப்புகளைத் தமிழன் எதிர்ப்பேயின்றி ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டான்.
என்கிற மிகவும் மனம் வருந்தத் தக்க நிலை நீடிக்கிறது. அதேவேளையில் இதைச் சீர் செய்யும் முயற்சிகளும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
சனவரி 25 ஆம் நாளன்று,சென்னையில் பன்னாட்டுத் தூயதமிழ் மாணவர் மாநாடு நடைபெறவுள்ளது.
அம்மாநாட்டின் அமைப்பாளர் இளங்கவி திவாகர் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது…
இற்றை இளையோரிடையே மொழிப்பற்று, மொழித்தூய்மை குறித்தான விழிப்புணர்வினை விதைக்கவும் தமிழரிடையே பெருகிவரும் தமிங்கில நடையைத் தகர்த்தெறிதல் வேண்டியும் அரசு – தனியார் பணிகள் – தமிழரின் வாழ்வியல் ஆகியவற்றில் தமிழ் மொழியின் பயன்பாட்டினை 100% நடைமுறைப்படுத்த வேண்டி வலியுறுத்தியும் தமிழ்நாடு – உலகம் முழுதுமுள்ள ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களை ஒன்றிணைத்து முற்றிலும் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் “பன்னாட்டுத் தூயதமிழ் மாணவர் மாநாட்டினைத்” தமிழியக்கம் உலகத்தமிழ் அமைப்பு அவர்களோடு இணைந்து எங்களின் செந்தமிழ்த் திருத்தோ் தூயதமிழ் மாணவர் இயக்கத்தின் சார்பில் தமிழியக்கத் தலைவரும் வி.ஐ.டி வேந்தருமான முனைவர் கோ.விசுவநாதன் அவர்களின் தலைமையில் நிகழ்த்தவுள்ளோம்.
மீண்டும் ஒரு தனித்தமிழ் விழிப்புணர்வானது தூயதமிழ் மாணவர் புரட்சியாய் இம்மாநாட்டில் நிகழவுள்ளது.
“மாணவர்களால் மாணவர்களுக்கே* நிகழ்த்தப்படும் இம்மாநாடு எழுச்சிபெற உங்கள் அனைவரின் நற்றுணையை தனித்தமிழன் இ நேருவும் நானும் கனிவுடன் வேண்டுகிறோம் !
மாணவர்கள் மட்டுமல்லாமல் தமிழ்ச் சான்றோர்கள், தமிழியல் செயற்பாட்டாளர்கள், பேராசிரியப் பெருமக்கள், தூயதமிழ்ப் பற்றாளர்கள் என அனைவரும் இம்மாநாட்டில் பங்கேற்று, இளையோரின் முன்னெடுப்பிற்கு உறுதுணையளிக்குமாறு பணிவன்புடன் வேண்டி அழைத்து மகிழ்கின்றோம்.
பங்கேற்கும் அனைவர்க்கும் சான்றிதழ், உணவு வழங்கப்படும்.
நுழைவுக் கட்டணம் இல்லை.
நாள் : 25.01.2025, சனிக்கிழமை – காலை 09.00 மணி
இடம் : வி.ஐ.டி பல்கலைக்கழகம் – கேளம்பாக்கம், சென்னை.
முன்பதிவு செய்திட :
https://forms.gle/Q3RnZNwtUH3CgTLC6
தொடர்பிற்கு,
8925494650, 7639079699
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வடக்கினில் தமிழர் வாழ்வை
வதக்கிப்,பின் தெற்குல் வந்தே இடக்கினைச் செயநினைத்த
எதிரியை, அந்நாள் தொட்டே “அடக்கடா” என்று ரைத்த
அறங்காக்கும் தமிழே: இங்குத் தடைக்கற்கள் உண்டென்றாலும்
தடந்தோளுண் டெனச்சிரித்தாய்! இது பகைக்கஞ்சாத் தமிழ்.
எனும் புரட்சிக்கவியின் சொல்லுக்கேற்ப நடக்கும் இந்நிகழ்வு சிறக்கவும் வெல்லவும் வாழ்த்துவோம்.
– அ.தமிழ்ச்செல்வன்