
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்த நிலைப்படி பார்த்தால் இந்த வருட தீபாவளி ரிலீஸ் களைகட்டும் போலத்தான் இருந்தது.. முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் இல்லாவிட்டாலும் கூட, அதற்கடுத்த ரேஞ்சில் உள்ள கார்த்தியின் ‘காஷ்மோரா’, விஷாலின் கத்திச்சண்டை ஆகியவை ஏற்கனவே தீபாவளி ரிலீஸ்தான் என அறிவித்தன.
இது போதாதென்று விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’, ஜி.வி.பிரகாஷின் ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்களும் இந்த ரேஸில் கலந்துகொள்ள பெயர் கொடுத்திருந்தன. ஆனால் இப்போது என்ன ஆயிற்றோ தெரியவில்லை, தீபாவளி ரிலீஸ் கலகலத்துப்பாய் விட்டது..
பின்னே…? முதலில் ‘கத்திச்சண்டை’ தீபாவளிக்கு ரிலீசாகாது என அறிவித்தார் விஷால்.. அதையடுத்து ஜி.வி.பிரகாஷ் விலகினார்.. இப்போது ‘சைத்தான்’ விஜய் ஆண்டனியும் தனது படத்தை நவம்பர் மாத ரிலீஸுக்கு தள்ளி வைத்துவிட்டார்.. ஆக காஷ்மோரா மட்டுமே இந்த தீபாவளிக்கு களைகட்டும் என்றே தெரிகிறது..
இதில் எந்த வித சம்பந்தமும் இல்லாமல் நதியா நடித்த ‘திரைக்கு வராத கதை’ என்கிற படம் நங்கள் தீபாவளி ரிலீசாக்கும் என சம்மன் இல்லாமல் ஆஜராகி இருக்கிறது. இதுவும் கடைசி நேரத்தில் கழன்றுகொள்ள வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆக இந்த வருட தீபாவளி கார்த்தியின் தீபாவளியாகத்தான் இருக்கும்போல இப்போதே அறிகுறி தெரிகிறது.


