உணர்ச்சிக் கொந்தளிப்புடன் நடந்த விக்னேசின் இறுதி நிகழ்வு

கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் செப்டம்பர் 15 அன்று ஊர்வலம் நடந்தது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். இயக்குநர்கள் சேரன், அமீர், சமூக ஆர்வலர்கள், மாணவர் அமைப்பு பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அப்போது, ஊர்வலத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளரான மன் னார்குடியை சேர்ந்த விக்னேஷ் (25) என்ற இளைஞர் கர்நாடகாவுக்கு எதிராகக் குரல் கொடுத்தவாறு தீக்குளித்தார்.

உடனடியாக சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட விக்னேஷ் நேற்று (செப்டம்பர் 16) காலை 10.55 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உடல் கூறாய்வுக்குப் பின்னர், விக்னேஷ் உடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விக்னேஷ் உடலத்தை சொந்த ஊருக்குத்தான் கொண்டு செல்ல வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால், வளசரவாக்கத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்வோம் என நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதம் செய்தனர். இதனால், காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர், வளசரவாக்கத்துக்கு விக்னேஷின் உடலம் எடுத்துச் செல்லப்பட்டது.

அஞ்சலிக்கு பின்னர், இரவில் விக்னேஷின் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

காவிரி நதிநீர் உரிமைக்காகத் தீக்குளித்து உயிர்நீத்த விக்னேசுக்கு இறுதி மரியாதை – புகைப்படங்கள்

இன்று 10.45 மணியளவில் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இதில் சீமான், வைகோ , கம்னியுஸ்ட் மகேந்திரன், விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான நாம்தமிழர்கட்சித் தொண்டர்களும் தமிழ் ஆர்வலர்களும் இறுதி ஊர்வத்தில் கலந்து கொண்டு விக்னேசுவின் தியாகத்தைப் போற்றினர்.

விக்னேஷின் உடல் அவரது வீட்டிலிருந்து மன்னார்குடி ருக்மணிபாளையம் சாலை, காந்தி ரோடு, பந்தலடி, தேரடி வழியாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, மூவாநல்லூர் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

மிக எழுச்சியுடனும் உணர்ச்சியுடனும் இறுதிநிகழ்வு நடந்தது.

காவிரி நதிநீர் உரிமை உட்பட தமிழின உரிமைகளுக்காக தீக்குளித்து உயிர்நீத்த விக்னேசு தமிழ்ச்சமுதாய வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.

Leave a Response