பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் என்றொரு சபாநாயகர் இருந்தார் – ஒரு பத்திரிகையாளரின் குறிப்பு

இருபத்தைந்தாண்டுகளுக்கு மேலாக தலைமைச்செயலகம் மற்றும் சட்டமன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பத்திரிகையாளர் மோகன். தற்போது தமிழகத்தின் முன்னணி நாளேடொன்றில் பணியாற்றுகிறார். சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். அண்மைக்கால தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் பற்றி அவர் எழுதியிருக்கும் குறிப்பு மிகவும் கவனிக்கத்தக்கது. அவர் எழுதிய குறிப்பில்…..

1996-2001ம் ஆண்டுவரை தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்தவர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன். இவர் சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து விட்டால் பாராபட்சம் இல்லாமல் நடந்து கொள்வார். எதிர்க்கட்சி ஆளுங்கட்சி உறுப்பினர் என்ற பாகுபாடு இவரிடம் கிடையாது. யாராக இருந்தாலும் பேரவை விதிகளின் படி அவர்களை வழி நடத்துவார்.
சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து விட்டால் சபை மரபுப்படி முதல்வர் உள்ளே வந்தாலும், வெளியே சென்றாலும் நாற்காலியை விட்டு எழுந்திருக்க மாட்டார். நாற்காலியில் அமர்ந்திருக்கும்போது பல நேரங்களில் தலைக்கு பின்னால் கையை கோர்த்தக் கொண்டு நாற்காலியில் மல்லாந்து தூக்குவதைப்போல் அமர்ந்திருப்பார். அவரை பார்க்கும் பலருக்கும் அவர் அசந்து விட்டார் என்றே தோன்றும், உறுப்பினர்கள் ஏதாவது தவறுதலாக குறிப்பிட்டாலோ, அல்லது சபை மரபுமை மீறியோ, விதிகளை மீறியோ ஏதாவது பேசிவிட்டால் அருகில் உள்ள மணியை அடித்து, சபையை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விதிகளுக்கு புறம்பாக பேசியவை சபை நடவடிக்கை குறிப்பிலிருந்து நீக்குகிறேன் என்பார்.

காங்கிரஸ் உறுப்பினர் பொதுப்பணித்துறை தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, அன்றைய முதல்வர் கருணாநிதி எழுந்து பதில் கூற முற்பட்டார். ‘‘துறை அமைச்சர் இருக்கிறார் அவர் பதில் சொல்லட்டும். நீங்கள் அமருங்கள்’’ என்றார். முதல்வர் அமர்ந்துவிட அன்றை பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். இன்றைய சபாநாயகர் இப்படி கூறுவாரா. பேரவையின் தலைவர் சபாநாயகர் இவர் சபைக்கு வரும்போது முதல்வர் உட்பட சபையில் உள்ள அனைவரும் எழுந்து நின்று சபாநாயகருக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதுதான் சபை மரபு. இன்றைய சபாநாயகர் சபைமரபை மதிக்காமல், முதல்வர் சபைக்கு உள்ளே வரும்போதும் வெளியே செல்லும்போதும் கட்சி தலைவர் என்ற அடிப்படையில் மரியாதை அளிக்கிறார். சபை மரபை மதிக்காத இந்த சபாநாயகர், எப்படி பாரபட்சமற்ற முறையில் நடந்துக்கொள்வார் என்பதற்கு இது ஒன்றே உதாரணம். மரபுகளையும் குழிதோண்டி புதைத்துவிட்டு சபை மரபுப்படி நடக்கும்படி மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கிறார். இதனால்தான் இவரை மற்றவர்கள் கேலியும் கிண்டலும் செய்கின்றனர்.

1962&1967ம் ஆண்டுவரை சபாநாயகராக இருந்த எஸ். செல்லப்பாண்டியன். சபைநடத்துவதில் பாரபட்சமற்ற முறையில் பேரவையை நடத்தியவர் என்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் பாராட்ட பட்டவர். பேரவை மரபுகளையும், கண்ணியத்தையும், மாண்பையும் காத்தவர். விதிகளுக்கு புறம்பாக யார் நடந்தாலும், பேரவை விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பவர் என்று பெயர் பெற்றவர்.

1957&62 வரை காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக சட்டப்பேரவையில் சிறந்த விவாதங்களை செல்லப்பாண்டியன் முன்வைத்துள்ளார். ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்ட தவறிய பல விஷயங்களை, ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த செல்லப்பாண்டியன், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். அப்போது முதல்வராக இருந்தவர் ராஜாஜி.

பேரவையில் முதல்வர் ராஜாஜி அமர்ந்திருந்தபோது, செல்லப்பாண்டியனுக்கு பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது அவர் ‘‘அரசின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என்று அரசின் சில தவறுகளை சுட்டிக்காட்டி’’ பேசியுள்ளார்.
சபை முடிந்ததும் செல்லப்பாண்டினை லாபியில் அழைத்து பேசிய ராஜாஜி ‘‘ நீங்கள் காமராஜரின் ஆளா? என்று அவரிடம் கேட்க. ‘‘நான் காமராஜரின் ஆளும் இல்லை, ராஜாஜியின் ஆளும் இல்லை. நான் நானாக இருக்கிறேன்’’ என்று பதில் அளித்துள்ளார். ‘‘அப்படி என்றால் மிக்க மகிழ்ச்சி’’என்று கூறிய ராஜாஜி அங்கிருந்து விடைபெற்றுள்ளார்.

இப்படிப்பட்ட பேரவையின் மாண்புகளையும், மரபுகளையும் கடைப்பிடித்த வரலாற்று சிறப்பு மிக்க தமிழக சட்டமன்றத்தில் இன்று ஊலையிடும் சத்தம் கேட்கிறது. முதல்வர் சபைக்குள் வரும்போதும், சபையை விட்டு வெளியே செல்லும் போதும் சபாநாயகர் தோப்புகரணம் போடுகிறார். சபாநாயகர் சபைக்கு வரும்போது சபை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து(முதல்வர் உட்பட) அவருக்கு மரியாதை அளிக்க வேண்டிய சபை மரபை சபாநாயகர் தனபால் காலில் போட்டு மிதித்துள்ளார். சபை நடவடிக்கைகள் குறித்து எழுதுவதற்கு இன்னும் எவ்வளவோ உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை விமர்சித்தால் சபைகுறிப்பிலிருந்து சபாநாயகர் நீக்குகிறார். ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியினரை வயக்காட்டு பொம்மை, அருகதை அற்றவர்கள் என எத்தனையோ வார்த்தைகளில் விமர்சித்தபோதும் அவை அத்தனையும் சபைகுறிப்புகளில் ஏற்றுகிறார். எதிர்க்கட்சியினர் தற்கொலை என்றாலும், முறைகேடு என்றாலும், அடிமைகள் என்றாலும் அத்தனையும் அவை குறிப்பிலிருந்து நீக்குகிறார்.

விதி 110 தமிழகத்தின் தலைவிதியை மாற்றி அமைக்கிறது என பேரவையில் சில உறுப்பின்கள் புகழ்கிறார்கள். உண்மையில் தமிழகத்தின் தலைவிதிதான் 110 விதி. இவ்விதி பேரவையில் எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று விதி சொல்கிறது என்றால், சபை நடைபெறும் நாட்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் சபைக்குள் இருப்பார்கள். அப்போது மாநிலத்தில் எதாவது ஒரு இடத்தில் கலவரம் ஏற்பட்டாலும், இயற்கை சீற்றத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், தீ விபத்தோ, ரயில் விபத்தோ எதிர்பாராமல் நிகழும் சம்பவங்கள் குறித்த தகவல், உடனடியாக முதல்வரின் கவனத்துக்கு காவல் துறை வாயிலாக கொண்டுவரப்படும். அந்த தகவல் சபையில் உள்ள உறுப்பினர்களுக்கு ஒரு தகவலாக மட்டுமே 110 விதியின் கீழ் சபை உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும். அதாவது 110 விதியில் முதல்வர் பேசுகிறார் எனறாலே, மாநிலத்தில் ஏதோ ஒரு எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்து விட்டது என்பதை உணர்ந்து உறுப்பினர்கள் அதை கவனிக்க காத்திருப்பார்கள்.

ஒரு சம்பவம் நிகழ்ந்த உடன் அதில் ஏற்பட்ட உயிர் இழப்போ, பொருட்சேதமோ? காயம்பட்டவர்களின் எண்ணிக்கையோ, சேதங்களின் மொத்த மதிப்போ உடனடியாக தெரிய வாய்ப்பில்லை என்பதால், 110 அறிவிப்பின் மீது விவதாமோ, கேள்வியோ கிடையாது என்பது விதி. ஆனால், இன்றைய 110 விதி ஒவ்வொரு நாளும் நலதிட்ட அறிவிப்பாகவும், அதன் மீது உறுப்பினர்கள் முதல், சபாநாயகர் வரை வாழ்த்தி பேசும் விதியாக மாறிவிட்டுள்ளது. இதுதான் தமிழக சட்டப்பேரவையின் இன்றைய தலைவிதி.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response