இலங்கை அரசினால் போர்க்கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட தமிழீழப் போராளிகள் மர்ம நோய்களினாலும், புற்று நோயினாலும் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பதற்கு சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 13-8-2016 சனி அன்று மே பதினேழு இயக்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
100க்கும் மேற்பட்ட போர்க்கைதிகளின் மரணம், இலங்கை அரசினால் சிறைபிடிக்கப்பட்ட பதினோராயிரம் பேரின் எதிர்காலத்தையும் ஆபத்தனதாக மாற்றியிருக்கிறது. உடனடியாக இதன் மீது ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழீழ இனப்படுகொலை முள்ளிவாய்க்காலோடு முடியவில்லை. ராணுவ ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றங்கள், புத்த விகாரை உருவாக்கங்கள், போராளிகள் படுகொலை செய்யப்படுதல் என தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
போர்க்கைதிகளை பாதுகாப்பது என்பதும், அவர்களது எதிர்காலத்தை உறுதி செய்வது என்பதும் சர்வதேச விதியாகும். இந்த சர்வதேச விதிகளை மீறி இலங்கை அரசாங்கம் மிகப்பெரிய குற்றத்தினைப் புரிந்து வருகிறது. போர்க்கைதிகளை அரசியல் கைதிகள் என்று அழைப்பதன் மூலம் ஐ.நா மனித உரிமை ஆணையர் அல் ஹுசைனும் இலங்கையின் இந்த சதித் திட்டத்திற்கு துணைபோய்க் கொண்டிருக்கிறார். போர்க் கைதிகளை விடுதலை செய்வதென்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரமல்ல. போர்க்கைதிகளை அரசியல் கைதிகள் என அழைப்பதன் மூலம், அவர்களின் விடுதலை உள்நாட்டு விவகாரம் என்று சர்வதேச விதிமீறலை இலங்கை அரசாங்கம் செய்து வருகிறது. ஆட்சி மாற்றம் நடந்தவுடன் இலங்கையில் ஜனநாயகம் மலர்ந்துவிட்டதாக ஐ.நாவும், சர்வதேசமும், இந்தியாவும் தொடர்ச்சியாக பொய் சொல்லி வருகின்றன.
போர்க்கைதிகளின் மர்ம மரணம், இலங்கையில் உள்நாட்டு விசாரணை என்பது சாத்தியமில்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது. அமெரிக்கத் தீர்மானம் தோற்றுப் போன ஒன்று என்பதை நிரூபித்திருக்கிறது. உடனடியாக இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், போர்க்கைதிகள் பாதுகாப்பை ஐ.நாவும், சர்வதேசமும் உறுதி செய்ய வேண்டுமென்றும், தமிழீழ மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்க பொதுவாக்கெடுப்பினை நடத்த வேண்டுமென்றும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அந்திரிதாஸ், தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகத்தின் குனங்குடி ஹனீஃபா, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் குடந்தை அரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கரு.அண்ணாமலை, வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் அருணபாரதி, தமிழர் விடுதலைக் கழகத்தின் இளங்குமரன், SDPI கட்சியின் கரீம், இந்திய தேசிய லீக் கட்சியின் நிஜாமுதீன், தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் சின்னப்பத் தமிழர், மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.