குற்றத்தை கெளதம்மேனன் செய்துவிட்டு சிம்புவைக் குறை சொல்வது ஏன்?

சிம்புவுக்காகக் காத்திருக்கிறேன் என்று வெளிப்படையாகப் பேட்டி கொடுத்திருக்கிறார் இயக்குநர் கெளதம்மேனன். அவர் இயக்கிக் கொண்டிருக்கும் அச்சமென்பதுமடமையடா படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் போய்க் காத்திருந்தும் சிம்பு வரவில்லை என்பது கெளதமின் குற்றச்சாட்டு.

இந்தப்படத்தை அவர் 2015 பிப்ரவரியிலேயே தொடங்கிவிட்டார். இப்போது 2016 ஜூன். படம் தொடங்கி  வருடம் நான்கு மாதங்கள் கழித்து சிம்பு மீது குற்றம் சொல்கிறார்.

தள்ளிப்போகாதே பாடலின் படப்பிடிப்பை நடத்த வெளிநாடு செல்லத்திட்டமிடும்போது கூடவே தனுஷ் நடிக்கும் என்னைநோக்கிப்பாயும்தோட்டா படத்தின் பாடலையும் படமாக்கத் திட்டமிட்டதாகவும் அது, சிம்பு தனுஷ் ஆகிய இருவருக்குமே தெரியும் என்பதும் கெளதமின் கூற்று.

என்னைநோக்கிப்பாயும்தோட்டா படத்தைத் தொடங்கியது 2016 மார்ச் மாதம்.அதாவது மூன்று மாதங்களுக்கு முன்னால். தொடங்கி ஒரு வருடத்துக்கும் மேலான படத்துக்கும் தொடங்கி மூன்றே மாதங்கள் ஆகிய படத்துக்கும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பைத் திட்டமிட்டது யார்?

கெளதமின் பேட்டியில், தனுஷ் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன்பின் அங்கிருந்து 60 கிமீ தள்ளி சிம்புவின் படப்பிடிப்பைத் திட்டமிட்டிருந்தோம் என்று சொல்லியிருக்கிறார்.

யாருமே கெளதம் மேனனை நம்பி தேதி கொடுக்காத நேரத்தில் அவர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டவர் சிம்பு. அதன்பின் அஜீத் படம் அமைந்ததும் அதை முடித்துவிட்டு வாருங்கள் என்று பெருந்தன்மையோடு அனுப்பிவைத்தவர் சிம்பு, முடித்துவிட்டு வந்த பின்பு சொன்னமாதிரியே கெளதம் படத்தில் நடிக்கிறவர் சிம்பு. உண்மை இப்படியிருக்கும்போது கெளதம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்?

முதல்லில் சிம்பு படத்தை முடித்துவிட்டு தனுஷ் படத்தைத் தொடங்கியிருக்கலாம் அல்லது வெளிநாடு போன இடத்தில் முதலில் சிம்பு படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கலாம். இரண்டையும் செய்யாதது மட்டுமல்ல, இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் ஒரே நேரத்தில் நடத்தத் திட்டமிட்டது சிம்பு தனுஷ் ஆகிய இருவருக்கும் தெரியும் என்று கெளதம் சொன்னதிலும் உண்மையில்லையாம்.

சிம்புவுக்குத் தெரியாமலேயே தனுஷ் படத்தின் படப்பிடிப்பைத் திட்டமிட்டிருக்கிறார். கடைசி நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் கிளம்பும்போதுதான் சிம்புவுக்கு விசயம் தெரிந்திருக்கிறது. அதனால், ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் கவனம் செலுத்துவது சரியாக இருக்காது என்று சொல்லிப் படப்பிடிப்புக்கு வர மறுத்திருக்கிறார்.

இங்கிருந்து கிளம்புவதற்கு முன்பாகவே சிம்பு வர முடியாது என்று சொல்லிவிட்டாராம். அப்புறமும் அங்கு போய்க் காத்திருந்தேன் என்று சொல்லியிருப்பதெல்லாம் ரொம்ப அதிகம் என்று விசயம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

எல்லாக் குற்றத்தையும் தானே செய்துவிட்டு சிம்புவைக் குறை சொல்லி வெளிப்படையாகப் பேட்டி கொடுத்ததற்கு என்ன காரணம்? என்பதுதான் இப்போதைய பெரிய கேள்வி. அதற்கான விடையையும் தேடிக் கண்டடைவோம்.

Leave a Response