
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட ‘கொளத்தூர் தொகுதி’ நட்சத்திரத் தொகுதியாகப் பார்க்கப்பட்டது. இதனால் அந்தத் தொகுதியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
அதாவது, தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 82,997 வாக்குகள் பெற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வீழ்த்தியிருப்பது தமிழ்நாட்டில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 74,202 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.அதிமுக வேட்பாளர் பி.சந்தன கிருஷ்ணன் 18,430 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
2011 ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதி உதயமானதில் இருந்து மு.க.ஸ்டாலின்தான் அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
2011 இல் கொளத்தூரில் மு.க.ஸ்டாலினும் அதிமுக தரப்பில் சைதை துரைசாமியும் மோதினார்கள்.அப்போது மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
2016 தேர்தலில் அதிமுகவின் ஜே.சி.டி.பிரபாகரை வென்று எதிர்க்கட்சித் தலைவரானார் மு.க.ஸ்டாலின்.
2021 தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் ஆதிராஜாராமை விட 70,384 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஆட்சியைப் பிடித்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானார் மு.க.ஸ்டாலின்.
இந்த 2026 தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவியுள்ளார்.
அவரை வென்ற வி.எஸ்.பாபு யார்?
ஒரு காலத்தில் வடசென்னை திமுகவில் அசுரசக்தியாக இருந்தவர்தான் இந்த வி.எஸ்.பாபு.வடசென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்த இவர், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் புரசைவாக்கத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
2011 இல் புரசைவாக்கம் தொகுதி நீக்கப்பட்டு கொளத்தூர் தொகுதி உதயமானது. 2011 இல் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிட்டதால் அப்போது வி.எஸ்.பாபுவுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருப்பினும் கொளத்தூரில் ஸ்டாலினின் வெற்றிக்காக உழைத்தார் பாபு.
அந்தச் சமயத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பி.கே.சேகர்பாபு, புதிய வரவாக திமுகவுக்கு வந்தார். அவருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததால் 2011 தேர்தலுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினை எதிர்த்துக் கொண்டு திமுகவிலிருந்து விலகிய வி.எஸ்.பாபு, அதிமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவிலும் அவருக்கான முக்கியத்துவம் குறைந்து போனது. இந்த நிலையில், 2017 இல் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகக் களப்பணி செய்ததாகக் கூறி, 2018 இல் வி.எஸ்.பாபு உள்ளிட்ட 168 பேர் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
அதன்பிறகு அமைதிகாத்த பாபு, இபிஎஸ் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றதும் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.ஆனாலும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.அதனால்,அதிருப்தியில் இருந்துவந்த வி.எஸ்.பாபு, சில மாதங்களுக்கு முன்பு, தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.
அவருக்கு கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை விஜய் கொடுத்தார்.தற்போது வி.எஸ். பாபு 82,997 வாக்குகள் பெற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வீழ்த்தியுள்ளார்.
முன்னொரு காலத்தில்,கொளத்தூரில் மு.க.ஸ்டாலினின் வெற்றிக்காக உழைத்தார் வி.எஸ் பாபு,தற்போது அவரையே வீழ்த்தியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
வெற்றி பெற்ற பின்பு வி.எஸ்.பாபு செய்தியாளர்களிடம் பேசும்போது….
எல்லாப் புகழும் விஜய்க்கே.நான் வெற்றி பெறவில்லை,விஜய்தான் வெற்றி பெற்றுள்ளார்.அவர் செல்லும் வழியில் நாங்கள் தொண்டராகச் செல்வோம்.கொளத்தூர் தொகுதியில் நான் வெற்றி பெற்றதுக்கு முதல்காரணம் விஜய்தான் என்று கூறினார்.


