
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வருகிற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் மார்ச் 16 ஆம் தேதி துவங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது. வேட்பு மனுக்களை வரும் 26 ஆம் தேதி வரை திரும்பப் பெறலாம்.
புதுச்சேரியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரசு, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, தேமுதிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன.
திமுக, காங்கிரசு ஆகிய கட்சிகள் இடையே கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது? கூடுதல் தொகுதிகளை இருவரும் கேட்டது உள்ளிட்ட காரணங்களால் இழுபறி நீடித்தது.
வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், நேற்று முன்தினம் நள்ளிரவு வரை திமுக-காங்கிரசு இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று காலை வரை ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், உறுதியான வேட்பாளர்களுக்கு திமுக மற்றும் காங்கிரசு சார்பிலும் ஏ பார்ம், பி பார்ம் கொடுக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. ஒரு சில தொகுதிகளில் மட்டும் இருகட்சிகள் சார்பிலும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்தச் சூழலில், காங்கிரசு – திமுக தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனைக் கூட்டம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இதில் புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், காங்கிரசு மாநில தலைவர் வைத்திலிங்கம் உள்ளிட்ட தேர்தல் குழுவினர் மற்றும் திமுக சார்பில் புதுச்சேரி மாநில திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் பாமஉ, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரசுக்கு 16, திமுக 14 என தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை ஒதுக்கும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, இருகட்சி தலைவர்களும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரசு-16, திமுக-12, விசிக-1, இந்திய கம்யூனிஸ்ட்-1 என்று போட்டியிடுவார்கள் எனச் சொல்லப்படுகிறது.


