
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா,புதுக்கோட்டையில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, திருச்சி ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் விடுதிக்கு இரவு 8 மணிக்கு சென்றார்.
திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் அமித்சாவை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவைச் சேர்ந்த யாரும் வரவேற்கவில்லை. பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.
அந்தப் பொதுக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்சா பேசினார்.அதேநேரம், சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக ஆட்சி அமையும் என எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
இந்தச் சூழலில், ஓட்டலில் நேற்றிரவு பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணி தொடர்பாக அமித்சா ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், அமித்சாவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று இரவு 9.45 மணியளவில் திடீரென சந்தித்துப் பேசினார்.
அமித்சா இம்முறை தமிழ்நாடு வரும்போது அதிமுக பாஜக கூட்டணி முழுவடிவம் பெற்றுவிடும் என்று சொல்லப்பட்டது.
ஆனால், அமித்சாவை எடப்பாடி பழனிச்சாமி மட்டுமின்றி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரும் புறக்கணித்துள்ளனர்.அதுமட்டுமின்றி பாமக,தேமுதிக ஆகிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க இயலவில்லை எனும் சூழல்.
இப்படிப்பட்ட நேரத்தில் அமித்சாவை முன்னாள் அமைச்சர் வேலுமணி, தனியாகச் சந்தித்துப் பேசியிருப்பது அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


