எஸ்.பி.வேலுமணியிடம் 2 முக்கிய செய்தி சொன்ன அமித்சா – எடப்பாடி அணி கலக்கம்

புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் மதியம் இராணுவ விமானம் மூலம் திருச்சி வந்தார்.மாலையில் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு அவர் நேற்றிரவு மீண்டும் திருச்சி சென்று ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

அங்கு, நேற்றிரவு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார்.

அப்போது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பாஜவுக்கு 60 தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதில் பின்வாங்க மாட்டோம். நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கவில்லை என்றால் உங்கள் மீதுள்ள அனைத்து வழக்குகளையும் தூசு தட்டுவோம். எங்களை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
நாங்கள் சொல்வதைத் தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் நினைத்தால் உங்கள் கட்சியில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். செய்யவா?செய்யவா? என்று தனது விரலை நீட்டியவாறு கோபத்துடன் அமித்ஷா எச்சரிக்கை விடுத்து மிரட்டும்தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது.

அதோடு, ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் சேர்க்கவேண்டும் அல்லது கூட்டணியில் இணைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இந்த விசயத்தில் நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் எனவும் எஸ்.பி.வேலுமணியிடம் மிரட்டல் விடுத்ததாகச் சொல்கிறார்கள்.

இதனால் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் மிகுந்த கலக்கத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response