அமித்சாவை புறக்கணிக்கும் ஓபிஎஸ் டிடிவி – பாஜக அதிர்ச்சி

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்தமான் தீவுகளின் தலைநகர் போர்ட்பிளேர் விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் இன்று (4 ஆம்தேதி) மாலை 4.55 மணியளவில் திருச்சி வருகிறார். பின்னர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புதுக்கோட்டைக்குச் செல்கிறார்.

புதுக்கோட்டை அருகே பள்ளத்திவயல் கருவேப்பிலான் கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹெலிபேடில்’ ஹெலிகாப்டர் தரை இறங்குகிறது. பின்னர் அங்கிருந்து, ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட பயண நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறும் பள்ளத்தி வயலுக்குச் செல்கிறார்.

பொதுக்கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு திருச்சி வருகிறார். இரவு 8 மணியளவில் திருச்சி ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்குகிறார்.

சனவரி 5 ஆம் தேதி காலை 9.50 மணியளவில் புறப்பட்டு காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் விடுதிக்கு காலை 10.40 மணிக்குத் திரும்புகிறார். ஒரு மணிநேரம் ஓய்வுக்குப் பின்னர்,மன்னார்புரம் இராணுவ மைதானத்தில் பிற்பகல் 12 மணியளவில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்.

பின்னர் அங்கிருந்து மதியம் 1.05 மணியளவில் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் செல்கிறார். விமானநிலையத்திலிருந்து 1.20 மணிக்கு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு, திருச்சி, புதுக்கோட்டையில் 2 நாள் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின்போது, பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிகிறது. இதில், தற்போது பாஜகவின் நிலைமை, கூட்டணி குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

வழக்கமாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் தமிழ்நாடு வரும்போது அவர்களைச் சந்திக்க ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் நேரம் கேட்பது வழக்கம். ஆனால் இந்த முறை இவர்கள் இருவரும் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கவில்லை எனத் தெரிகிறது.

முன்னதாக, அமித்ஷா தமிழ்நாடு வரும் நேரத்தில் அவரைச் சந்திக்க விரும்பாமல் எடப்பாடி பழனிச்சாமி சேலம் சென்றுவிட்டார்.

அதேசமயம், ஓபிஎஸ் மற்றும் டிடிவி ஆகியோர் அமித்ஷா வருகையின்போது மீண்டும் கூட்டணியில் இணைக்கப்படுவார்கள் என்று பாஜக தரப்பில் சொல்லப்பட்டது.

இப்போது அவர்களும் அமித்ஷாவை புறக்கணித்திருப்பது அவருக்கும் பாஜக கட்சியினருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்கிறார்கள்.

Leave a Response