தமிழகத்தில் பணியாற்றும் பிற மொழியினருக்கு தமிழ்ப் பயிற்சி கட்டாயம் – தி.க மாநாட்டில் தீர்மானம்

20.3.2016  திருச்சி சிறுகனூரில் அமைந்துள்ள பெரியார் உலகம் திடலில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற சமூகநீதிமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மத்திய அரசுத் தேர்வுகள் – அனைத்து

மொழிகளிலும் எழுதிடும் உரிமை அவசியம்

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மற்றும் வங்கிப் பணிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுகள், ஹிந்தி, ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்படுவதால், ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே ஆகிய துறைகளில் ஹிந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குடிமைப்பணித் தேர்வில் (அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்றவை) அனைத்து மொழிகளிலும் தேர்வு எழுதும் நிலை உள்ளதால், தமிழ்நாட்டில் கிராமப்பகுதிகளில் உள்ள இளைஞர்கள் இந்தத் தேர்வுகளில் ஓரளவு வெற்றி பெற முடிகிறது. மத்திய அரசின் அனைத்துத் தேர்வுகளும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்ட அனைத்து தேசிய மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

மத்திய அரசு துறைகளில் பணியாற்றும்
பிற மொழியினருக்கு தமிழ்ப் பயிற்சி தேவை

தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்கள், ரயில்வே, வங்கிகள் அனைத்திலும் இன்று வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் பணியாற்றி வரு கிறார்கள். தமிழ்நாட்டில் பணியாற்றினாலும், இதில் மிகப் பெரும் பான்மையானோர், ஹிந்தி மட்டுமே பேசுகின்றனர். இதன் காரணமாக இந்த அலுவலகங்கள், வங்கிக் கிளைகளுக்குச் செல்லும் தமிழ்நாட்டு வாடிக்கையாளர்கள் இந்த அதிகாரிகளோடு எந்தச் செய்தியையும் பகிர்ந்து கொள்ள  முடியவில்லை. மத்திய அரசு உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும், ஹிந்தி மொழியைப் பரப்பிட ஒரு துறை உருவாக்கப்பட்டு, அதற்கென தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய பணி என்பது, ஹிந்தி மொழியை பணியாளர்களிடையே ஊக்கப்படுத்துவதாகும். தற்போது, ஹிந்தி மொழி மட்டுமே தெரிந்த அதிகாரிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாலும், அவர்களுக்குத் தமிழ் மொழி சிறிதும் தெரியவில்லை என்பதைக் கருத்தில் கொண்டும், மத்திய அரசு ரயில்வே மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில், தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க துறை அமைக்கப்பட்டு, அதற்கென அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

இவை உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Response