உடுமலை சாதி ஆணவக் கொலை – தேசிய ஆணையம் நேரடி விசாரணை

உடுமலையில், தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரது தந்தை உறவினர்களிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நேற்று விசாரணை நடத்தியது.

திருப்பூர் மாவட்டம் குமரலிங்கத்தை சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர் (22). பழனியை சேர்ந்த சின்னசாமியின் மகள் கவுசல்யா (21). பொள்ளாச்சியில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் இருவரும் படித்து வந்தனர். இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டு குமரலிங்கத்தில் வசித்து வந்தனர். கடந்த 13ம் தேதியன்று உடுமலைக்கு வந்தபோது நடுரோட்டில் மர்மகும்பலால் வெட்டி சாய்க்கப்பட்டனர். இதில் சங்கர் இறந்தார். கவுசல்யா படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையக் குழு உறுப்பினர் சந்திரபிரபா நேற்று நேரில் விசாரணை நடத்தினார். உடுமலையில் கொலை நடந்த இடத்தை பார்வையிட்ட அவர், போலீஸ் நிலையத்துக்குச் சென்று விசாரித்தார். பின்னர், குமரலிங்கத்தில் உள்ள சங்கரின் வீட்டுக்குச் சென்று அவரது தந்தை வேலுச்சாமி, சகோதரர்கள் யுவராஜ், விக்னேஷ் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தார். பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் கவுசல்யாவிடம் விசாரணை நடத்தினார்.

நிருபர்களிடம் சந்திரபிரபா கூறியதாவது: கலப்பு திருமணம் செய்து கொண்ட தலித் வாலிபர் சங்கர் கொலை வழக்கு எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, உடுமலை போலீசார் மற்றும் பாதிக்கப்பட்ட சங்கரின் உறவினர்களிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. சங்கரின் குடும்பத்தாருக்கு, நிவாரணத் தொகை முழுமையாக அவர்களுக்கு கிடைத்துள்ளதா என்பதை கேட்டறிந்தேன். சங்கரின் சடலத்தை அடக்கம் செய்தபோது போலீசார் தடியடி நடத்தியதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தது குறித்து விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.  5 பேர் சிக்கியது எப்படி?: சங்கர் கொலை தொடர்பாக 5 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்தனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது:  உடுமலை பெதப்பம்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் செக்போஸ்ட் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டி மகன் ஜெகதீசன் (31), பழனி ராமர் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மணிகண்டன் (25) என்பதும், சங்கர் கொலையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இவர்கள் கொடுத்த தகவலின்பேரில், திண்டுக்கல்லைச் சேர்ந்த பாண்டி மகன் செல்வகுமார் (25), முருகேசன் மகன் மைக்கேல் (எ) மதன் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தோம். பொன்மாந்திரையைச் சேர்ந்த தன்ராஜ் என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம். இவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய 2 பைக், 2 கத்தி, 2 அரிவாள், 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.  கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இங்கு, ஜெகதீசன் டிரைவராக உள்ளார். இவர் மூலமாக 4 பேரும் சேர்ந்து இக்கொலையில் ஈடுபட்டனர்.  இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். கைதான 5 பேரையும் உடுமலை ஜே.எம். 1 கோர்ட் மாஜிஸ்திரேட் வித்யா வீட்டில் நேற்று காலை 7.30 மணிக்கு ஆஜர்படுத்தினர். அவரது உத்தரவின்பேரில், 15 நாள் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை அரசு மருத்துவமனையில் கவுசல்யாவிடம் தனி அறையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையகுழு உறுப்பினர் சந்திரபிரபா விசாரணை நடத்தினார். அப்போது, ‘‘என் மாமா பாண்டிதுரை, அம்மா அன்னலட்சுமி ஆகியோரை கைது செய்துவிட்டீர்களா?. அவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்’’ என்று கவுசல்யா ஆவேசமாக கதறினார். இதுபற்றி தேசிய ஆதிதிராவிட நல ஆணையக்குழு உறுப்பினர் சந்திரபிரபா கூறியதாவது: கவுசல்யா தன் படிப்பை தொடர விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விசாரணை குறித்த அறிக்கையை டெல்லி தேசிய ஆதிதிராவிட நல ஆணையகுழு தலைவரிடம் 2 நாட்களில் சமர்ப்பிக்கவுள்ளோம். சங்கரின் குடும்பத்தார் சிறிது நாட்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response