10 ஆம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துகளுடன் நந்தி சிற்பம் – தமிழரின் பெருமைக்கு சான்று

திருப்பூர் அருகே 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ் எழுத்துகளுடன் கூடிய நந்தி சிற்பம் ஒன்றை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் சாலையில் உள்ள படியூர் அருகே சின்னாரிபட்டி கிராமம் கம்பத்தீஸ்வரர் கோயிலில், திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் க.பொன்னுசாமி, ச.ரஞ்சித், ரா.செந்தில்குமார்,பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் கடந்த சில நாள்களாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துகளுடன் கூடிய நந்தி சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு மைய இயக்குநர் பொறியாளர் சு.ரவிக்குமார் கூறியது:

தமிழர்களின் 3,000 ஆண்டு பாரம்பரிய வாழ்வுடன் பசுவும், காளைகளும் கலந்து உயர்வு பெற்றன. காளைகள் தமிழர் பண்பாட்டையும், கலாசார பாரம்பரியத்தையும் பறைசாற்றி நிற்கின்றன. மனிதகுல மேம்பாட்டுக்கான விழுமியங்களை சுட்டி நிற்பவை காளைகள். பசுக் கூட்டத்துக்குத் தலைமை வகிக்கும் ஒருவர் மக்கள் கூட்டத்தின் தலைவனாகக் கருதப்பட்டார். இச்சிறப்பினை பறைசாற்றும் வண்ணம் சிவன் கோயில்களில் லிங்கத்தின் முன்பும், அம்மையின் முன்பும் நந்தி அமைக்கப்பட்டு இருக்கிறது. சிவனுக்கு வாகனமும், கொடிச் சின்னமும் நந்தியாகும். பல்லவ மன்னர்களும் நந்தியை தங்கள் கொடியாக கொண்டிருந்தனர். பண்டைய தமிழ் இலக்கியத்தில் கோ என்ற சொல், நாட்டுத் தலைவனைக் குறிக்கும். அதே சொல் பசுவுக்கும், காளைகளுக்கும் வழங்கும் பொதுச் சொல்லாகும்.

இவ்வாறு பல சிறப்புகளைப் பெற்ற நந்தி சிற்பம் கொங்கு மண்டலத்தில் பட்டி என்ற சொல்லில் முடியும் கிராமத்தில் கிடைத்திருப்பது மிக சிறப்பான ஒன்று. இங்கு கண்டறியப்பட்ட இந்த சிற்பம் 90 செ.மீ. நீளமும் 50 செ.மீ. உயரமும் கொண்டதாகும். அதன் உடலில் 8 வரிகளில் எழுத்துகள் உள்ளன.

அந்த கிராமத்திலுள்ள கால்நடைகள் நோய் வாய்ப்பட்டபோது, நோய் குணமானவுடன் வேண்டுதலாக அதன் உருவமாக செய்து வைத்ததுதான் இந்த நந்தி சிற்பம்.

 இந்த நடைமுறை இன்றும் கொங்கு பகுதிகளில் நீடிக்கிறது. தற்போது மக்கள் மண்ணால் உருவம் செய்து வைக்கின்றனர் என்றார்.

Leave a Response