
பாஜக சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக தேசிய துணைத் தலைவர் பைஜெயந்த் பாண்டா பா ம உ, இணை பொறுப்பாளர் ஒன்றிய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் சென்னைக்கு நேற்று முன்தினம் வந்தனர்.
தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை மாநில நிர்வாகிகளுடன் முதல்கட்ட ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், மாநில பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் எச்.ராஜா, வானதி சீனிவாசன் ச ம உ, நடிகர் சரத்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் குறித்து நீண்டநேரம் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, அதிமுக கூட்டணியில் அதிகத் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவது, கூட்டுப் பரப்புரை செய்வது, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை, எவை என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.அதோடு, அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து விலகிச் சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோரை மீண்டும் இணைப்பது குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மேலிட பொறுப்பாளர்கள் சென்னை, ஆழ்வார்பேட்டை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் நேற்று காலை திடீரென சந்தித்துப் பேசினர். அப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உடனிருந்தார். அதிமுக தரப்பில், எடப்பாடியைத் தவிர வேறுயாரும் இல்லை.
இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில்,
அஇஅதிமுக பொதுச் செயலாளர் மற்றும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் திரு.எடப்பாடி பழனிச்சாமி
அவர்களை, மரியாதை நிமித்தமாக இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், பாஜக தேசிய துணைத் தலைவரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான, மாண்புமிகு. நாடாளுமன்ற உறுப்பினர், திரு. பைஜெயந்த் பாண்டா அவர்களுடன் சந்தித்தேன் என்று கூறியிருக்கிறார்.
இவ்வாறு வெளிப்படையாகச் சொல்லப்பட்டாலும், அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து விரைவில் நல்ல முடிவு எட்டப்படவேண்டும் என பாஜக தரப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.அதனால் கட்சியினர் வேறு யாருமின்றி எடப்பாடியை மட்டும் தனியாக பாஜக குழுவினர் சந்தித்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.


