சிராக் பஸ்வான் போர்க்கொடி – பீகாரில் பாஜக கூட்டணிக்குப் பின்னடைவு

பீகாரின் மறைந்த அரசியல் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான், அம்மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளார். அவர் கடந்த 2020 பீகார் தேர்தலில் தனித்துக் களமிறங்கி நிதிஷ் குமார் கட்சிக்குப் பெரும் சேதாரத்தை உருவாக்கினார். அதேபோல 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது அவரின் கட்சி. எனவே லோக் ஜனசக்தி கட்சிக்கு இப்போது மவுசு அதிகரித்திருக்கிறது.

ஒன்றிய அமைச்சராக இருக்கும் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கும், பீகாரில் ஆளும் ஜேடியு – பாஜக கூட்டணிக்கும் இடையில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பீகார் சட்டப்பேரவையில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 40 இடங்களை பாஸ்வான் கட்சி பெற விரும்புகிறது. ஆனால், பாஜக 25 இடங்களை மட்டுமே ஒதுக்கத் தயாராக உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் பாஸ்வான் அதிருப்தியில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில்தான், பாஸ்வான் பிரசாந்த் கிஷோர் தரப்புடனும் பேச்சுவார்த்தைக்கு தூது விட்டுள்ளாராம். பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, பீகாரில் தனித்துப் போட்டியிடுகிறது. இக்கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு இல்லையெனிலும், கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் எனச் சொல்லப்படுகிறது. எனவே வலுவான கூட்டணியை அமைக்க பிரசாந்த் கிஷோர் முயற்சித்து வருகிறார்.

பிரசாந்த் கிஷோரின் முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக சமீபத்தில் பேசியுள்ள சிராக் பாஸ்வான், “நான் காய்கறிகளில் உப்பு போன்றவன். ஒவ்வொரு தொகுதியிலும் 20,000 முதல் 25,000 வாக்குகளை என்னால் பிரிக்க முடியும். எனவே கூட்டணியிலிருந்து வெளிநடப்பு செய்யும் விருப்பம் எனக்கு எப்போதும் உண்டு” என்று கூறினார்.

சிராக் பாஸ்வானுக்கும், நிதிஷ் குமாருக்கும் எப்போதும் ஆகாது. எனவே தொகுதி எண்ணிக்கையைக் காரணம் காட்டி பாஸ்வான் கடைசி நேரத்தில் வெளியேறும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி நடந்தால் அது பாஜக கூட்டணியின் தோல்வியை உறுதிப்படுத்தும் நிகழ்வாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

இதனால் சிராக் பஸ்வானை சமாதானம் செய்யும் முயற்சியில் தில்லி பாஜக தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது என்று சொல்கிறார்கள்.

Leave a Response