பாதியில் வெளியேறிய செல்லூர் ராஜு – முருகபக்தர்கள் மாநாடு பரபரப்பு

இந்து முன்னணி சார்பில் மதுரையில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. திருப்பரங்குன்றம் மலையை பின்னணியாகக் கொண்ட மாநாட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது.

நேற்று நடந்த மாநாட்டிற்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாநாட்டின் முக்கிய நிகழ்வாக கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் பல்லாயிரம் பேர் இணைந்து ‘கந்த சஷ்டி கவசம்’ பாடினர்.

மாநாட்டில், திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் தீபம் ஏற்ற வேண்டும், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூரை நடத்திய பிரதமருக்கு நன்றி தெரிவிப்பது, திருப்பரங்குன்றம் மலை போல குன்றம் குமரனுக்கே என்பதாக அனைத்து மலைகளும் காக்கப்பட வேண்டும், கோயில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும், வரும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் இந்து வாக்குகள் ஒன்றாக இருக்க வேண்டும்; இந்துக்களுக்கு எதிரானவர்களுக்கு ஓட்டுப் போடக்கூடாது, மாதம்தோறும் எல்லோர் வீட்டிலும் கோயிலிலும் சஷ்டி நாளில் கந்தசஷ்டி கவசம் பாட வேண்டும் ஆகிய 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உயர்நீதிமன்றக் கிளையில் மாநாட்டில் அரசியல் பேச மாட்டோம் என்று உறுதி தந்திருந்த நிலையில் விதிகளை மீறி வெளிப்படையாக திருப்பரங்குன்றம் மலை பிரச்னை துவங்கி பலதரப்பட்ட அரசியல் விசயங்கள் பலராலும் பேசப்பட்டன. தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா சமஉ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் தீர்மானங்கள் வாசித்து நிறைவேற்றப்பட்ட பிறகு, மாநாட்டு மேடை அருகே இருந்த ராட்சத திரையில் இந்து முன்னணியினர் தயாரித்து இருந்த காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டது. அந்தக் காட்சியின் பின்னணியில் ‘தர்மம் காக்க..’ என்ற குரல் ஒலித்தபடி இந்து முன்னணியின் முந்தைய தலைவர்கள் ராமகோபாலன் துவங்கி பலரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து ‘அதர்மம் ஒழிக்க..’ என்ற குரல் ஒலித்தபடி பெரியார், அண்ணா படங்களை திரையில் காட்டினர். இதைப் பார்த்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதன் பிறகும், ‘கருப்புச் சட்டைக்காரர்கள்’ என்று பெரியார் ஆதரவாளர்களையும், ‘உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான்’ என்றும் அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பேசியதில் அதிமுகவினரின் முகம் சுருங்கியது.

இதனால், திடீரென செல்லூர் ராஜூ மேடையை விட்டு எழுந்து கூட்டத்தை விட்டு விறுவிறுவென வெளியேறிச் சென்றார். அவரிடம் பேட்டி காண செய்தியாளர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவர் எதுவும் பேசாமல் வெளியேறிச் சென்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Response