
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையைத் தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுடன் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு பிரிவு காவல்துறையினரும் ஒருகிணைந்து செயல்படுகின்றனர்.
இந்நிலையில்இந்நிலையில்,ஜூன் 17 ஆம் தேதி இரவு சந்தேகத்தின்பேரில் இளைஞர் ஒருவரைப் பிடித்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 11 கிராம் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அதை வைத்திருந்த சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற பிரடோவை (38) கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், அவருக்கு போதைப்பொருள் விநியோகத்ததாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான் (38) என்பவரை ஓசூரில் கடந்த 18 ஆம் தேதி கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் யாருக்கெல்லாம் போதைப்பொருளை விநியோகம் செய்தார் என்ற பட்டியலைக் கொடுத்தார். அந்தப் பட்டியலில் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்தும் இடம்பெற்றிருந்தார்.
இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் ஸ்ரீகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, தான் போதைப்பொருளை பயன்படுத்தியது கிடையாது என்று ஸ்ரீகாந்த் வாதம் செய்துள்ளார்.
இதையடுத்து ஸ்ரீகாந்தின் இரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. இதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தால் 45 நாட்கள் வரை இந்த பரிசோதனையில் கண்டறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தினர்.அங்கு ஜூலை 7 வரை நீதிமன்றக் காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.அதன்பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக, அவரிடம் நடத்திய விசாரணையில்,அவர் மட்டும் அல்லாமல் திரைப் பிரபலங்கள் பலரும் போதைப் பொருளைப் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சிக்கல் திரைத்துறை மட்டுமின்றி அரசியலிலும் புயலைக் கிளப்பும் என்று சொல்லப்படுகிறது.
ஏனெனில், கைது செய்யப்பட்டுள்ள பிரதிப்பிடமிருந்து ஸ்ரீகாந்த் நேரடியாகப் போதைப் பொருளை வாங்கவில்லையென்றும் அவருக்கு வாங்கிக் கொடுத்தவர் பிரசாத் என்பதும் தெரியவந்துள்ளது.
மே 22 ஆம் தேதி நுங்கம்பாக்கம் பகுதியில் தனியார் பாரில் மது போதையில் நடந்த தகராறில் தூண்டில் உணவக உரிமையாளர் ராஜா, அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி, தொழிலதிபர் கணேஷ்குமார், தனசேகரன் மற்றும் அதிமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி பிரசாத் உள்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதில் கைதான அதிமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி பிரசாத் தான் இதிலும் சிக்கியுள்ளார். இவர் மூலம்தான் நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருக்கு போதைப் பொருள் கிடைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இவரும் எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுனும் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் என்று சொல்லப்பட்டது,அதன் காரணமாகவே இவர் வழக்கில் சிக்கியதும் உடனடியாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
இப்போது போதைப் பொருள் வழக்கிலும் அவர் சிக்கியிருப்பதால் இது எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுன் வரை நீளுமோ என்கிற அச்சத்தில் அந்த வட்டாரத்தினர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.


