
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த ஞாயிறு இரவு சேலம் சென்றார். நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். நேற்று பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அவரது முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர்.
குறிப்பாக குவைத் மண்டல பாமக தலைவர் இன்ஜினியர் சீனிவாசன் அதிமுகவில் சேர்ந்தார். அவர் கூறுகையில், ‘பாமக தற்போது இருக்கும் நிலையில் தொண்டர்களாகிய நாங்கள் என்ன செய்வது எனத் தவிக்கிறோம். எனவே அதிமுகவில் இணைந்துவிட்டேன்’ என்றார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று (ஜூன் 3,2025) காலை 10 மணிக்கு இரகசியமாக வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுச் சென்றதாகவும் 12 மணிக்குத் திரும்பி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் கூடத் தெரியாமல் மகன் மிதுனுடன், எண் பலகை இல்லாத மகிழுந்தில் அவர் சென்று திரும்பி வந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
அவர் எங்கு போனார்? யாரைச் சந்தித்தார்? என்பது யாருக்கும் தெரியவில்லை.இந்த விசயம் தெரியாலம் அந்த நேரத்தில் அவரைப் பார்க்க வந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுக சமஉக்கள் கூட்டம் நடக்கிறது. இதற்காக நேற்று மாலை சேலத்தில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிச்சாமி சென்னை புறப்பட்டு வந்துள்ளார். கூட்டம் முடிந்தவுடன் மீண்டும் மாலையில் சேலம் செல்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதிமுக ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டணியில் கட்சிகளைச் சேர்ப்பது ஆகிய வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி மகனுடன் இரகசியப் பயணம் மேற்கொண்டது அதிமுக வட்டாரத்திலும் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


