நடிகர் ஸ்ரீகாந்த் ஒப்புதல் வாக்குமூலம் – அதிமுகவினருக்குச் சிக்கல்

ஜூன் 17 ஆம் தேதி இரவு சந்தேகத்தின்பேரில் இளைஞர் ஒருவரைப் பிடித்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 11 கிராம் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அதை வைத்திருந்த சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற பிரடோவை (38) கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், அவருக்கு போதைப்பொருள் விநியோகத்ததாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான் (38) என்பவரை ஓசூரில் கடந்த 18 ஆம் தேதி கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் யாருக்கெல்லாம் போதைப்பொருளை விநியோகம் செய்தார் என்ற பட்டியலைக் கொடுத்தார். அந்தப் பட்டியலில் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்தும் இடம்பெற்றிருந்தார்.

இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் ஸ்ரீகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, தான் போதைப்பொருளை பயன்படுத்தியது கிடையாது என்று ஸ்ரீகாந்த் வாதம் செய்துள்ளார்.

இதையடுத்து ஸ்ரீகாந்தின் இரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. இதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தால் 45 நாட்கள் வரை இந்த பரிசோதனையில் கண்டறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.அவரை நேற்றிரவு எழும்பூர் பெருநகர குற்றவியல் 14 ஆவது நீதிமன்ற நடுவர் முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

அப்போது, போதைப் பொருளை யாருக்கும் விற்பனை செய்யவில்லை எனவும், தான் மட்டுமே பயன்படுத்தியதாகவும் நீதிபதியிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.மேலும், போதைப்பொருளை பயன்படுத்தி தவறு செய்துவிட்டதாகவும், தனது மகனை கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும், குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகமாக இருக்கிறது எனவும் கூறி நடிகர் ஸ்ரீகாந்த் பிணை கேட்டுள்ளார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் பிணை மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்.

நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவர் முதல்வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் தாக்கல் செய்துள்ள பிணை மனுவில், ‘போதைப்பொருள் பயன்படுத்தி தவறு செய்துவிட்டேன். உடல்நிலை சரியில்லாத மகனைக் கவனித்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. நான் கண்டிப்பாக அவர்களுடன் இருந்தாக வேண்டும். வெளிநாடு எதற்கும் செல்ல மாட்டேன், வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஸ்ரீகாந்த் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதால் அவருக்கு அதை வாங்கிக் கொடுத்தது அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் அவருக்கும் அவருடன் தொடர்புடையோருக்கும் சிக்கல் என்றும் கூறப்படுகிறது.

Leave a Response