
சென்னை லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட, இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு சார்பில், 2026 இல் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் யார் முதலமைச்சராவார்? எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும்? என்கிற கேள்விகளை முன்வைத்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு கூறியதாவது….
234 தொகுதிகளில் கருத்துக் கேட்கும் பணி பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கியது. 70,922 பேரிடம் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பின் முதற்கட்ட ஆய்வு, இம்மாதம் 17 ஆம் தேதி நிறைவு பெற்றது.
தற்போதைய தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள், மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் கட்சிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரதான கேள்விகளை மையமாக வைத்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த முதலமைச்சராக அதிக வாய்ப்புள்ள தலைவர்கள் என்ற கேள்விக்கு பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில், 77.83 விழுக்காடு பேர், மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அடுத்து, 73.30 விழுக்காடு பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், 67.99 விழுக்காடு பேர் உதயநிதிக்கும், 64.58 விழுக்காடு பேர் அண்ணாமலைக்கும், 60.58 விழுக்காடு பேர் விஜய்க்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இன்றைய அரசியல் சூழலில் யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள் என்ற கேள்விக்கு, 17.7 விழுக்காடு பேர் தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அ.தி.மு.க., – 17.3 விழுக்காடு பேர்; த.வெ.க., – 12.20 விழுக்காடு பேர்; பா.ஜ.க,வுக்கு 5 விழுக்காடு பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 3.3 விழுக்காடு பேர், ‘நோட்டா’ என தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.


