
இந்திய அரசின் தொடர்ச்சியான தாக்குதலில் தமிழ்நாடு சிக்கித் தவிக்கும் நிலையில், இந்தியாவை முழுமையான கூட்டாட்சியாக அறிவிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, அதற்கான கூறுகளை விவாதிக்கும் வகையில், தஞ்சையில், மே 10 – 2025 சனிக்கிழமையன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் “கூட்டரசுக் கோட்பாடு” – சிறப்பு மாநாடு முழுநாள் நிகழ்வாக நடைபெற்றது.
இந்தியாவை “பாரதம்” என்று சமற்கிருத புராணப் பெயரால் அழைப்பதோ, தேசிய இனத் தாயகங்களை “மாநிலங்கள்” என்று குறுக்கி அழைப்பதோ கூடாது, இந்தியாவை அதன் புவி அரசியல் பெயரால் “இந்தியா” எனபதாக மட்டுமே அழைக்க வேண்டும், மாநிலங்களை இனத்தாயகங்கள் என வரையறுக்க வேண்டும், ஆளுநர் பதவி கூடாது, வரி அதிகாரம் அனைத்தும் இனத்தாயக அரசுகளுக்கே வேண்டும் என்பன உள்ளிட்ட “கூட்டரசு”த் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காலை 9 மணியளவில், முருகன்குடி திருவள்ளுவர் கலைக்குழுவினரின் எழுச்சிமிகு நாட்டுப்புற இசை நிகழ்வுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின.இதனையடுத்து, பிள்ளையார்பட்டி சகோதரிகள் சீ.பாரதி – சீ.யுவசிறீ ஆகியோர் பாவேந்தரின் “வாழ்வினில் செம்மையை” – தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை அழகுறப் பாடினர். இதனையடுத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை வரவேற்புரையாற்றினார். இதனையடுத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கக் கொடியை, த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழ.இராசேந்திரன் ஏற்றி வைத்தார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முகாமையான போராட்டங்களைக் காட்சிப்படுத்தும் வகையிலான பேரியக்க வரலாற்றுக் கண்காட்சியை, த.தே.பே. தலைமைச் செயற்குழு வெ.இளங்கோவன் முன்னிலையில், பொருளாளர் அ.ஆனந்தன் திறந்து வைத்தார். தமிழர் தொன்மையை விளக்கும் தமிழர் வரலாற்றுக் கண்காட்சியை, பேரியக்கச் செயல்பாட்டாளர்கள் பல்வில்திரையன், கரூர் தினேசு ஆகியோர் முன்னிலையில் காவிரி உரிமை மீட்புக் குழு செயற்குழு உறுப்பினர் சாமி.கரிகாலன் திறந்து வைத்தார்.
மாநாட்டின் நோக்கங்கள் குறித்து, த.தே.பே. தலைமைச் செயற்குழு கோ.மாரிமுத்து உரையாற்றினார். இந்தியாவை முழுமையானக் கூட்டரசாக மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளதை அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
“கூட்டரசுக் கோட்பாடு” மாநாட்டின் நோக்கங்களை விளக்கும் வகையில், பாவலர் நா.இராசாரகுநாதன் எழுதி, திருச்சி பொறியாளர் முத்துக்குமாரசாமி பாடி – இசையமைத்த மாநாட்டின் பாடல் காணொலியை இயக்குநர் மு.களஞ்சியம் மாநாட்டு அரங்கில் வெளியிட, ஊடவியலாளர் அருள்மொழிவர்மன் பெற்றுக் கொண்டார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாஸ்கர் முன்னிலை வகித்தார்.
தீர்மானம்
”தேசிய இனத் தாயகங்களின் முழுமையான கூட்டரசாக இந்திய ஒன்றியத்தை மாற்றியமைக்க வேண்டும். நாட்டுப் பாதுகாப்பு, நாணய அச்சடிப்பு, வெளியுறவு, அனைத்திந்தியத் தன்மை வாய்ந்த தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து ஆகியவை குறித்த அதிகாரம் மட்டுமே கூட்டாட்சி அரசுக்கு வழங்கப்பட வேண்டும். இனத் தாயகங்களுக்கு வகுக்கப்படும் அதிகாரத்தில் கூட்டாட்சி அரசு குறுக்கிடும் அதிகாரம் கூடாது. அந்தந்த அதிகார மட்டத்தில், அந்தந்த அரசமைப்பு உறுப்பும் இறைமை கொண்டதாக இருக்க வேண்டும். கூட்டாட்சி அரசுக்கும் இனத்தாயக அரசுக்கும் பொதுஅதிகாரம் எனக்கூறும் ஒத்திசைவு அதிகாரப்பட்டியல் இருக்கவே கூடாது” என்ற மாநாட்டின் முதன்மைத் தீர்மானத்தை, த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் கதிர்நிலவன் முன்மொழிய, பலத்த கையொலி எழுப்பி அனைவரும் வரவேற்றனர். பின்னர், வெவ்வேறு பொருள்களில் இயற்றப்பட்ட தீர்மானங்களை, பேரியக்கத் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் முன்வைத்தனர்.
இதனையடுத்து, மாநாட்டின் முதல் கருத்தரங்காக “தமிழர் வரலாற்று வளம்!” கருத்தரங்கு நடைபெற்றது. சேலம் – தமிழ்வேத ஆகமப் பாடசாலை மற்றும் அரசயோகி கருவூறார் தமிழின குருபீடத்தின் நிறுவனர் சிம்மம் சத்தியபாமா அம்மையார் முன்னிலை வகித்துப் பேசினார். ”தமிழ் மன்னர்களின் நிலதான அறமும் அவதூறும்” என்ற தலைப்பில், தமிழிய வரலாற்று ஆய்வாளர் இரா.மன்னர்மன்னன், ”தமிழர் ஆன்மிக மொழி தமிழே!” என்ற தலைப்பில், குச்சனூர் இராசயோக சித்தர் பீடம் வடகுரு மடாதிபதி ஐயா குச்சனூர் கிழார், “தமிழர் தொன்மையும் வன்மையும்” என்ற தலைப்பில், பேராசிரியர் – முனைவர் கோ. தெய்வநாயகம், ”தமிழ் – தமிழர் மறுமலர்ச்சியில் மதுரை – கரந்தை தமிழ்ச் சங்கங்கள்” என்ற தலைப்பில், பேராசிரியர் – முனைவர் மு.இளமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.
இதனையடுத்து, செங்கிப்பட்டி கருப்பசாமியின் “கலைப்புயல்” சிலம்பாட்டக் குழுவினரின் சிலம்பாட்டம் மாநாட்டு அரங்கை அதிரச் செய்தது.
இதனையடுத்து, “தமிழ் மேல் ஆணை”என்ற தலைப்பில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாஸ்கர் தலைமையில் பாவரங்கம் நடைபெற்றது. பாவலர்கள் மூ.த.கவித்துவன், நா.இராசாரகுநாதன், முழுநிலவன், ஏ.பிரகாசுபாரதி ஆகியோர் பாவீச்சு நிகழ்த்தினர்.
இதனையடுத்து நடந்த, சிதம்பரம் – தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் மல்லர் கம்பம் நிகழ்வு, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து,ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.எழுதியுள்ள “சிந்து முதல் வைகை வரை” நூலுக்கு மறுப்பாக தமிழ் இன – மொழி ஆய்வாளர் தக்கார் ம.சோ.விக்டர் எழுதியுள்ள “பஃறுளி முதல் சிந்து வரை”ஆய்வு நூலின் வெளியீட்டு நிகழ்வு நடந்தேறியது. பன்மைவெளி வெளியீட்டகப் பொறுப்பாளர் வெற்றித்தமிழன் முன்னிலையில், மூத்த ஊடகவியலாளர் பா.ஏகலைவன் இந்நூலை வெளியிட தமிழிய ஆய்வாளர் இரா.சிங்காரவேலு, நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி.செந்தில், காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் த.மணிமொழியன்,தமிழர் தேசியக் களம் தலைவர் ச.கலைச்செல்வம், மகளிர் ஆயம் துணைத் தலைவர் க.செம்மலர், வள்ளலார் பணியகம் ஒருங்கிணைப்பாளர் மு.சுந்தரராசன், புதுச்சேரி தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் புதுவைத் தமிழ்நெஞ்சன், புதுச்சேரி படைப்பாளர் இயக்கத் தலைவர் ஆறுச்செல்வன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.பெ.மணியரசன், இந்நூலின் அவசியம் குறித்துப் பேசினார்.
இதனையடுத்து, “கூட்டரசு” என்ற தலைப்பில் நடைபெற்றக் கருத்தரங்கில், “வரி விதித்து வசூலித்தல்” என்ற தலைப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் க.அருணபாரதி, “ஆட்சிமொழி” என்ற தலைப்பில், நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், “உள்ளாட்சியில் தன்னாட்சி” என்ற தலைப்பில், தன்னாட்சி அமைப்பின் துணைத்தலைவர் நந்தகுமார் சிவா, “கூட்டரசில் ஆளுநர் பதவி உண்டா?” என்ற தலைப்பில், மகளிர் ஆயம் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மு.செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் உரை நிகழ்த்தினர். த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி.தென்னவன் இக்கருத்தரங்கை நெறிப்படுத்தினார்.
மாநாட்டின் நிறைவரங்கில், பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் தொடக்கவுரையாற்றினார். மாநாட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்து, தில்லியிலிருந்து மனித உரிமைச் செயல்பாட்டாளரும், உலக சீககியர் செய்திகள் (The World Sikh News – WSN) ஆசிரியருமான பேராசிரியர் ஜக்மோகன் சிங், நாகாலாந்திலிருந்து மனித உரிமைகளுக்கான நாகா மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் நியூங்குலோ குரோமே, மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வரும் வங்காள இன உணர்வு அமைப்பான “பங்களா போக்ரோ” அமைப்பின் பொதுச் செயலாளர் கார்கா சேட்டர்ஜி, அசாமில் செயல்பட்டு வரும் அசாம் ஜாட்டியதபாடி யுப பரிசத் (Asom Jatiyatabadi Yuba Parishad – AJYP) அமைப்பின் பொதுச்செயலாளர் உதயன் குமார் கோகாய் ஆகியோர் எழுதியிருந்த கடிதங்களைப் படித்து, அதன் தமிழாக்கத்தை எடுத்துரைத்தார். இதனையடுத்து சிறப்புரையாற்றிய கி.வெ., “கூட்டரசுக் கோட்பாடு” மாநாட்டின் முதன்மைத் தீர்மானத்தை விளக்கியும், உலகெங்கும் கூட்டரசுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
இதனையடுத்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநாட்டுத் தீர்மானங்களை வரவேற்று சிறப்புரையாற்றினார். பெ.மணியரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த சீமான், பெ.ம.வின் வாழ்விணையர் இலட்சுமி அம்மாளை மேடையேற்றி பிறந்தநாள் பரிசு வழங்கிப் பாராட்டினார். அதன்பிறகு சிறப்புரையாற்றிய சீமான், “இந்தியாவைக் கூட்டரசாக மாற்றும் இக்கோரிக்கை, தமிழினத்தின் கோரிக்கை மட்டுமல்ல இந்தியாவிலுள்ள அனைத்துத் தேசிய இனங்களுக்குமான முகாமையான கோரிக்கை. இதை வென்றெடுக்க நாங்கள் உறுதியெடுக்கிறோம்” என எடுத்துரைத்தார்.
நிறைவாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், மாநாட்டு நிறைவுப் பேருரையாற்றினார்….
இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்ற வேண்டும் என்பது ஒரு இயக்கத்தின் கோரிக்கையல்ல – இந்த இனத்தின் கோரிக்கை! இறையாண்மையுள்ள தேசிய இனங்களின் தாயகக் கூட்டரசாக இந்தியாவை மாற்றினால் மட்டும்தான் இந்தியா நிலைக்க முடியுமே தவிர, வெறும் இராணுவத்தை வைத்து, சட்டங்களை வைத்தெல்லாம் இந்தியாவைப் பாதுகாத்துவிட முடியாது. இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருப்பதா அல்லது அவரவரைப் பிரிந்து போக விடுவதா என்பது, ஆளும் இந்தி ஏகாதிபத்தியவாதிகளின் கைகளிலே இருக்கிறது. அந்தந்த தேசிய இனங்களை மதித்து இறையாண்மை கொடுத்தால்,அவர்களும் இந்த இந்தியக் கூட்டரசில் இருப்பார்கள். அதெல்லாம் முடியாதென்றால், அவரவரும் தனிப் பாதை தேடிக் கொள்வார்கள். தமிழினமும் தனிப்பாதை தேடிக்கொள்ளும்
இவ்வாறு அவர் உரையாற்றினார்.


