போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவிப்பதா? இந்தியாவுக்கு நல்லதல்ல – கிருஷ்ணசாமி கருத்து

புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, மாநில பொதுச் செயலாளர் வே.க.அய்யர், மாவட்டச் செயலாளர்கள் பா.அதிக்குமார் குடும்பர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.செல்லத்துரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்தியாளர்களிடம் தமிழ்நாடு அரசியல் தொடர்பாகப் பல விசயங்களைச் சொன்ன அவர் இந்தியா பாகிஸ்தான் போர் பற்றியும் கருத்து தெரிவித்தார்.அதுகுறித்து அவர் கூறியதாவது….

பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரை அனைவரும் வரவேற்றுள்ளனர். ஆக்கிரமிப்பு காஷ்மீரை இன்னும் கைப்பற்றவில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்றுள்ளதா என்று தெரியவில்லை. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டார்களா? அழிக்கப்பட்டார்களா? என்று தெரியவில்லை. இதற்கிடையே நேற்று அமெரிக்கா தலையீட்டில் போர் நிறுத்தம் என்று செய்திகள் வருகின்றன. இதனையே இந்திய அரசும் தெரிவித்துள்ளது. 5 ஆவது வல்லரசு நாடாக இந்தியா உள்ளது. நம்முடைய நிலைமையை இன்னொரு நாடு முடிவெடுப்பது இருப்பது ஏற்புடையது அல்ல. போர் நிறுத்தம் என்பதை இந்தியா தான் அறிவிக்க வேண்டும். வேறு நாடு அறிவிப்பு தவறான முன்னுதாரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் இந்தக் கருத்தை அவர் சொல்லியிருப்பதால் அவர் இம்முறை அதிமுக பாஜக கூட்டணியில் இடம்பெற மாட்டார் போலும் அதனால்தான் பாஜகவை பலவீனப்படுத்தும் இந்தக் கருத்தை வெளிப்படையாகச் சொல்லிவருகிறார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

Leave a Response