வதந்தி பரப்பும் பாசகவினரைக் கைது செய்யுங்கள் – பெ.மணியரசன் கோரிக்கை

மதக்கலவரத்தைத் தூண்டும் பா.ச.க.வினர் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தஞ்சை மாவட்டம் – மைக்கேல்பட்டி தூய இருதய ஆண்டவர் மேனிலைப்பள்ளியின் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, இறந்துபோன செய்தியை வைத்து, தமிழ்நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கு பாரதிய சனதாக் கட்சியினர் மேலிருந்து கீழ்வரை தீவிரம் காட்டுகிறார்கள். அந்த மாணவியின் தற்கொலையில் மதமாற்றத்திற்கான காரணம் இல்லை என்று தஞ்சை மாவட்டக் காவல்துறையும், பள்ளிக் கல்வித்துறை ஆய்வறிக்கையும் தெளிவாகக் கூறி விட்டன. அப்பள்ளியின் பெரும்பான்மை மாணவர்கள் இந்துக்கள். அவர்கள் யாரும் இதுபோன்ற மதமாற்றப் புகாரை இதுவரை தெரிவிக்கவில்லை.

ஆனாலும், இந்து மாணவியை கிறித்துவ மதத்திற்கு மாற்ற பள்ளி நிர்வாகப் பொறுப்பாளர்கள் வலியுறுத்தினார்கள், அதனால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என இட்டுக்கட்டி, அந்த வதந்தியைத் தீவிரப்படுத்தும் போராட்டங்களை பா.ச.க. நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டளவில் அந்த வதந்தி எடுபடாத நிலையில், அனைத்திந்திய சிக்கலாக அதை மாற்றுவதற்கு பா.ச.க. தலைமை புதிதாக ஒரு அனைத்திந்திய விசாரணைக் குழுவை போட்டிருக்கிறது.

அன்றாடம், பா.ச.க. தலைவர்கள் மதப் பகைமையைத் தூண்டக்கூடிய அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள். குசராத்து போல, உத்தரப்பிரதேசத்தைப் போல தமிழ் நாட்டிலும் வதந்திகளை வைத்து, செயற்கைக் காரணங்களால் மதக் கலவரத்தைத் தூண்டி பா.ச.க.வை வளர்க்க வேண்டும் என்பது அவர்களின் திட்டம் எனத் தெரிகிறது.

எனவே, இனியும் காத்திருக்காமல் தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும். பொய்ச் செய்திகளைப் பரப்பி மதக் கலவரத்தைத் தூண்டுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response