
வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது 12 மணி நேரம் காரசாரமான விவாதம் நடைபெற்றது. பின்னிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவையில் 520 உறுப்பினர்கள் இருந்தனர். மசோதாவை நிறைவேற்ற 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 288 உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிராக 232 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதைத் தொடர்ந்து ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் நேற்று வக்பு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.
மசோதா மீதான விவாதத்தை அவர் தொடங்கிவைத்து பேசியதாவது….
வக்பு வாரியத்திடம் ஏராளமான சொத்துகள் உள்ளன. ஆனால் இந்த சொத்துகளால் ஏழை முஸ்லிம்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. வக்பு சொத்துகள் தொடர்பாக கடந்த 2006 ஆம் ஆண்டில் சச்சார் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்தது. அப்போது வக்பு வாரியங்களிடம் 4.9 இலட்சம் சொத்துகள் இருந்தன. அவற்றின் மூலம் ரூ.163 கோடி மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டது.
வக்பு சொத்துகளை முறையாக நிர்வகித்து இருந்தால் ரூ.12,000 கோடி வரை வருவாய் ஈட்டியிருக்க முடியும். தற்போது வக்பு வாரியங்களிடம் 8.72 இலட்சம் சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளை முறையாக நிர்வகித்தால் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். வக்பு சொத்துகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். ஏழை முஸ்லிம்கள் பலன் அடைய வேண்டும். இவற்றை கருத்தில் கொண்டே வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, நேர்த்தி ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் வக்பு சட்ட திருத்த மசோதா வரையறுக்கப்பட்டு இருக்கிறது.கேரளாவில் 600 குடும்பங்களின் நிலங்களை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுகிறது. இதை எதிர்த்து கத்தோலிக்க பேராயர்கள், பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. நாடாளுமன்றக் கட்டிடம் இருக்கும் இடம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று ஒருசாரார் கூறுகின்றனர். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே வக்பு சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் ரிஜிஜு பேசினார்.
காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினர்.
12 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த விவாதத்தைத் தொடர்ந்து மின்னணு முறையில் மாநிலங்களவை உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்களும், எதிராக 95 உறுப்பினர்களும் வாக்களித்ததாக மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.
மாநிலங்களவையில் மொத்தம் 236 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஆளும் பாஜக கூட்டணிக்கு 121 உறுப்பினர்களும் காங்கிரசுக் கூட்டணிக்கு 85 உறுப்பினர்களும் உள்ளனர். இரு அணிகளைச் சேராத 30 உறுப்பினர்களும் உள்ளனர். மாநிலங்களவையில் வக்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற 119 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இதன்படி மாநிலங்களவையில் பாஜக கூட்டணியைத் தவிர ஏழு பேர் வக்பு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அதேசமயம், காங்கிரசுக் கூட்டணியைச் சாராத பத்து பேர் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
மாநிலங்களவையில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக திமுக, அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்தனர். தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்பட அதிமுகவின் 4 உறுப்பினர்களும் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாசு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். மசோதாவுக்கு ஆதரவாக தமாகவின் ஜி.கே.வாசன் வாக்களித்தார்.


