
திமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்…
2026 மார்ச் 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், திராவிட முன்னேற்றக்க கழகத்திற்கான 4 இடங்களில் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சிக்கு ஒரு இடமும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்திற்கு ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மீதமுள்ள 2 இடங்களில் திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, பேராசிரியர் ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருச்சி சிவா, 1954 ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவரது மனைவி தேவிகாராணி.மகள்கள் காயத்ரி,பத்மபிரியா, மகன் சூர்யா.இவர்,முதுகலைப் பட்டம் பெற்றவர்,சட்டம் பயின்றவர். 1976 இல் மிசாவில் கைது செய்யப்பட்டார். மாவட்ட இளைஞர் அணி,கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பதவிகளில் இருந்துள்ளார். 1996, 2002, 2007, 2014, 2020 ஆகிய ஆண்டுகளில் 5 முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர். தற்போது 6 ஆவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகத் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்னொரு உறுப்பினரான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
பேராசிரியர். எம்இ, எம்சிஏ, எம்பிஏ, எல்எல்பி, பிஎச்டி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு வரை கணினிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.தேமுதிக தொடங்கப்பட்டபோது அக்கட்சியில் இணைந்து பணியாற்றினார். 2016 ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். தற்போது திமுகவில் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


