செங்கோட்டையன் இரகசிய தில்லி பயணம் – பின்னணி தகவல்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மார்ச் 25 ஆம் தேதி திடீரென டெல்லிக்கு சென்று இரவில் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இருவரும் ஒன்றரை மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர்.

கடந்த சில மாதங்களாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி ஏற்படுமா? என்ற கேள்வி முக்கியமாக இடம் பெற்றது. அப்போது, பத்திரிகையாளர்களிடமே கோபப்பட்டு வந்த எடப்பாடி பழனிச்சாமி, ‘பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக பொதுக்குழுவில் எடுத்த முடிவுபடி இனி எக்காரணத்தை கொண்டும் அதிமுக – பாஜக கூட்டணி கிடையாது’ என்பதை உறுதியாகக் கூறி வந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி திடீரென டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. யாருக்கும் தெரியாமல் சந்திக்க முடிவு செய்து, மூன்று கார்களில் மாறி மாறி ஏறிச் சென்றார். இதை பத்திரிகையாளர்கள் கண்டுபிடித்து செய்தியாக வெளியிட்டனர். அதன்படி ஒருவழியாக கடந்த 25 ஆம் தேதி எடப்பாடி – அமித்ஷா சந்தித்து நடந்து முடிந்தது.

அப்போது வழக்குகளை காரணம் காட்டி எடப்பாடி பழனிச்சாமி மிரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி விட்டதாகக் கூறப்பட்டது.

இதனை எடப்பாடி உறுதிபடுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை. சேலத்தில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பாஜகவுடன் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு, ‘எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை தேர்தல் நெருங்கும்போது நாங்களே சொல்லுவோம்’ என்று கூறியிருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துப் பேசிவிட்டு சென்னை திரும்பியதையடுத்து, மறுநாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார். அவருடன் தமிழ்நாடு பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனும் டெல்லி சென்றுள்ளார்.அவர்கள், தொடர்ந்து 2 நாட்கள் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் அமித்ஷாவை சந்தித்துப் பேசினர்.

அப்போது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி குறித்துப் பேசி உள்ளனர். அதேநேரம் பிரிந்து சென்ற அதிமுக தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று டெல்லி தலைமையிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த உறுப்பினருமான செங்கோட்டையன் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மதுரை சென்றார். அங்கிருந்து அவசரமாக விமானம் மூலம் திடீரென டெல்லி சென்றார்.

டெல்லி சென்ற அவர், இரவு 7 மணிக்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார். அவருடன் தமிழ்நாடு தொழில் அதிபர்கள் ஸ்ரீதர், வெங்கட்ராமன் ஆகியோர் சென்றதாகக் கூறப்படுகிறது. இரவு நிர்மலா சீதாராமன் வீட்டில் செங்கோட்டையன் உணவு உண்டார்.

இந்தச் சந்திப்பு முடிந்ததும், நிர்மலா சீதாராமன், செங்கோட்டையன் ஆகிய இருவரும் அமித்ஷாவை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்தது. பின்னர் இரவு டெல்லியில் தங்கியிருந்தார். நேற்று காலையில் விமானம் மூலம் மதுரை வந்தவர், அங்கிருந்து சொந்த ஊரான கோபிச்செட்டிபாளையம் புறப்பட்டுச் சென்றார். இது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டையன் அவசரமாக டெல்லி சென்று திரும்பியதும், அங்கு பாஜக மூத்த தலைவர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசியது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. காரணம், எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றபோது, அமித்ஷாவிடம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மூத்த தலைவர்களை கட்சியில் சேர்ப்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. டெல்லி பாஜக தலைவர்களும், அதிமுக ஆட்சியில் எடப்பாடி முதல்வராக இருந்தபோது மூத்த அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியலை வைத்து மிரட்டிப் பணிய வைக்க முயற்சி செய்தது. இதையடுத்து எடப்பாடி, தமிழ்நாடு பாஜகவுடன் கூட்டணி வைக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஆனாலும், தமிழ்நாடு வந்த பிறகு கடந்த 2 நாட்களாக எடப்பாடி நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றே கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை எக்காரணம் கொண்டும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என்று கூறினார். இது டெல்லி பாஜக தலைவர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது.

இதையடுத்து, சமீபகாலமாக எடப்பாடியுடன் மோதல் போக்கை தொடர்ந்துள்ள செங்கோட்டையனை டெல்லி பாஜக தலைவர்கள் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். காரணம், எடப்பாடிக்கு இணையான தலைவர் செங்கோட்டையன். அவருக்கு கட்சியில் நல்ல செல்வாக்கு உள்ளது. அதேநேரம் அதிமுக தலைவர்கள் மற்றும் பாஜக உள்ளிட்ட மாற்றுக்கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் நல்ல தொடர்பில் இருப்பவர். அதனால், எடப்பாடி பழனிச்சாமி பாஜக வழிக்கு வராவிட்டால், செங்கோட்டையன் மூலமாக அதிமுக கட்சியை உடைத்து, சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஒன்றிணைத்து, அதுதான் உண்மையான அதிமுக என்று அறிவித்து விட்டு, அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது, எடப்பாடி பழனிச்சாமியை கட்சியில் இருந்து வெளியேற்றுவது என்பதுதான் பாஜகவின் திட்டம் என்றும் கூறப்படுகிறது. மேலும் செங்கோட்டையன் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமியுடன் மோதி வந்தார். தற்போது அமித்ஷாவை சந்தித்தது மூலம் கடந்த சில நாட்களாகவே செங்கோட்டையனை இயக்கியது பாஜகதான் என்று தற்போது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணியை எப்படியாவது கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே, நேற்று முன்தினம் டெல்லியில் நிர்மலா சீதாராமன் மூலம் செங்கோட்டையனிடம் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை வலுப்படுத்தும் விதமாகத்தான், இரு நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், பொதுச் செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி ஒதுங்கிக் கொள்வது நல்லது என்று மிரட்டும் தொனியில் பேசியிருந்தார். அதாவது ஒருங்கிணைந்த அதிமுக இருக்க வேண்டும். அதனுடன் பாஜக கூட்டணி அமைக்க வேண்டும். இதைத்தான் அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தியுள்ளார். அமித்ஷாவின் சிக்னல் கிடைத்த பிறகுதான் பன்னீர்செல்வம் அவ்வாறு பேசியுள்ளார் என்று தற்போது தெரியவந்துள்ளது.

மேலும், எடப்பாடி பழனிச்சாமி, மூத்த தலைவர்களை சேர்க்காத பட்சத்தில், அதிமுகவை உடைத்து, எடப்பாடி பழனிச்சாமியை கட்சியை விட்டு வெளியேற்றிவிட்டு, அவர் இல்லாத அதிமுகவுடன் கூட்டணி அமைக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், பாஜகவுடன் கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதித்தாலும், தாங்கள் சொல்படி சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்கள் மிரட்டுவது அதிமுகவினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், ‘செங்கோட்டையன் டெல்லி சென்று நிர்மலா சீதாராமனைச் சந்தித்தது குறித்து நேற்று எடப்பாடியிடம் கேட்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார். கட்சித் தலைமையிடம் கேட்காமலே, செங்கோட்டையன் டெல்லி சென்று வந்துள்ளது உறுதியாகியிருக்கிறது.

டெல்லி சென்று வந்த பிறகும் ஓ.பன்னீர்செல்வத்தைக் கட்சியில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி பேசியதால்தான் அவரை மிரட்டுவதற்காக செங்கோட்டையனை அழைத்துப் பேசியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இதன்பின்னரும் எடப்பாடி பழனிச்சாமி இறங்கி வரவில்லையெனில் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் என்றும் அவை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response