
பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை எனக் கூறிவந்த எடப்பாடி பழனிச்சாமி, திடீர் பயணமாக மார்ச் 25 ஆம் தேதி டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.அந்தச் சந்திப்பு முடிந்தவுடன், தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித்ஷா சமூகவலை தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்தச் சந்திப்பின் போது, சசிகலா,ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோரை இணைக்கவேண்டும் என்று அமித்ஷா கூறியிருக்கிறார்.ஆனால் சென்னை வந்ததும் அதைச் செய்யாமல் அதற்கு எதிர்மறையாக எடப்பாடி பேசினார்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில்,மார்ச் 28 ஆம் தேதி செங்கோட்டையன் இரகசியமாக டெல்லி சென்று, அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்ததாக தகவல் வெளியானது.
எடப்பாடி சொன்னதைச் செய்யாவிட்டால், செங்கோட்டையனை வைத்து கட்சியில் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனால் செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து தலைவர்களில் ஒருவராகவும், கொங்கு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமையாகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவுடன் அதிக நெருக்கம் காட்டி வந்தார். அதிமுகவில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை இணைப்பதில் இவர் ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் மூத்தவரான செங்கோட்டையனை, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதிப்பதில்லை எனவும், நிர்வாகிகள் நியமனத்தில் செங்கோட்டையனின் பரிந்துரைகள் ஏற்கப்படுவதில்லை எனவும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மத்தியில் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி- செங்கோட்டையன் இடையே பனிப்போர் நிலவி வந்தது.
பிப்ரவரி 9 ஆம் தேதி அது வெளிப்படையானது. கோவையில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தைச் செயல்படுத்தியதற்காக விவசாய அமைப்புகள் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதற்கான அழைப்பிதழ் மற்றும் பதாகைகளில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்கள் இல்லை எனக்கூறி அவ்விழாவில் பங்கேற்பதை செங்கோட்டையன் தவிர்த்தார். அப்போது முதல் செங்கோட்டையன்,எடப்பாடி பழனிச்சாமியுடன் பாராமுகமாக இருந்து வருகிறார். அவருடனான சந்திப்பை தவிர்த்து வருகிறார். சட்டப்பேரவைக்கு வந்தாலும், அதற்கு முன்பாக நடைபெறும் அதிமுக சமஉக்கள் கூட்டத்தைப் புறக்கணித்தார். வழக்கமாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வரும் நுழைவு வாயிலையும் தவிர்த்தார்.
இப்போது அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்படும் என்கிற தகவல் பரப்பப்படுவதன் மூலம்,அமித்ஷா சொன்னதை எடப்பாடி செய்யாவிட்டால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு அதிமுக தலைவராக செங்கோட்டையன் பொறுப்பேற்பார் என்கிற செய்தியை அதிமுகவினருக்கும் மற்றோருக்கும் தெரியப்படுத்துகிறார்கள் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
பாஜகவின் இந்த உச்சகட்ட மிரட்டலால் பதறிப்போயிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதனால் அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.


