மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களின் குறைகளைப் போக்குவதற்கான மக்கள் குறைதீர்ப்பு முகாம் மதுரை கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டி….
மும்மொழிக் கொள்கை என்பது முதன்முதலில் 1968 இல் கொண்டு வரப்பட்டு, பின் சட்டமாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 57 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால், மும்மொழிக் கொள்கையை எங்கேயும் அமல்படுத்த முடியவில்லை. அதற்கான முயற்சியையும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை எடுத்துக் கொண்டதால் சிறப்பான விளைவு கிடைத்துள்ளது. ஒன்றிய அளவில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் சிறப்பான பயன் கிடைத்துள்ளது.
பேரறிஞர் அண்ணா சொன்னது நமக்கு இருமொழி தான். நமக்கு தமிழ், உலகத்திற்கு ஆங்கிலம் அதுதான் நம் கொள்கை. உ.பி, இராஜஸ்தானில் இருமொழிக் கொள்கையை ஒழுங்காக நிறைவேற்றி இருந்தார்கள் என்றால், மூன்றாவது மொழி தேவை இல்லை. எல்லா மும்மொழிக் கொள்கையிலும் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகத்தான் கூறுகின்றனர். இரண்டாவது மொழியை ஒழுங்காகக் கற்றுக் கொடுத்தார்கள் என்றால் இந்த பிரச்னை வந்திருக்காது.
தேசிய கல்விக் கொள்கை என்ற முயற்சியை நிறைவேற்றினால் தான் நிதி கொடுப்போம் என்பது ஜனநாயக விரோதம், சட்டவிரோதம். நாங்கள் சொல்வதால் நீங்கள் அமல்படுத்த வேண்டும் என்பது எந்த வகையில் நியாயமாகும்? எந்த சட்டப்படியும் மூன்றாவது மொழியைத் திணிப்பதற்கு அதிகாரம் கிடையாது. உரிமையும் கிடையாது. சிறப்பாக இரு மொழிக் கொள்கையை அமல்படுத்திய பின்னர், இங்கு வந்து மும்மொழிக் கொள்கைக்கு மாற வேண்டும் என்று சொன்னால் அறிவு உள்ளவர்கள் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? பின்பற்றுவார்களா? பல மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கை கூட முறையாக, ஒழுங்காக நிறைவேற்ற முடியவில்லை.
இருமொழிக் கொள்கையை நாம் சிறப்பாக அமல்படுத்தி உள்ள நிலையில், மீதமுள்ள மாநிலங்களை நம் அளவுக்கு உயர்த்த முடியாது என்பதால் நம்மை அவர்கள் நிலைக்கு குறைக்க நினைக்கிறார்களா என்று அச்சம் உள்ளது. முழுதாகத் தோல்வியடைந்த மாடலை கொண்டு வந்து, இங்கு பின்பற்ற வேண்டுமென்றால் அறிவு உள்ளவர்கள் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? ஒரு இடத்தில் கூட மும்மொழிக் கொள்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாதவர்கள் ஏன் தமிழ்நாட்டில் திணிக்க வேண்டும்.
சிறப்பாகச் செயல்படக்கூடிய இரு மொழிக் கொள்கையில் ஏன் பிரச்னை செய்ய வேண்டும்? எல்லோரும் படிக்க வேண்டும் என்பதையே நீதிக்கட்சி காலத்தில் இருந்து கொள்கையாக வைத்துள்ளோம். இளம் வயதில் அனைவருக்கும் ஒரே மாதிரி சமமான கல்வி கொடுக்க வேண்டியது என்பது அடிப்படை தத்துவம். சிலர் கிராமப்புறத்தில் இருந்து வருவார்கள். சிலர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாக இருப்பார்கள். சிலர் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கெல்லாம் பொதுவான பாடத்திட்டம் இருந்தால் அனைவரும் சமமாக ஒரே புரிதலோடு வருவார்கள். ஆகையால் தான் இரு மொழிக் கொள்கையை வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் இரு மொழிக் கொள்கையைத்தான் ஆதரிக்கின்றன. யாரும் மும்மொழிக் கொள்கை வேண்டும் என கூறவில்லை. எங்களுக்கு பல தலைமுறை அனுபவம் உள்ளது.
இரு மொழிக் கொள்கைதான் சிறப்பாக உள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை தனக்கு இந்தி தெரியாது என்று கூறியுள்ளார். இந்தி தெரியாததால் அவருக்கு ஏதேனும் பிரச்னை வந்ததா? எனவே, திரும்பத் திரும்ப மும்மொழி என பேசினால் நம்மைக் கெடுப்பதற்காகத் தான் பேசி வருகிறார்கள் என நான் கருதுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தப் பேட்டியில் அறிவுள்ளவர்கள் மும்மொழியை ஏற்றுக்கொள்வார்களா? என்கிற கேள்வி வெகுமக்கள் வரவேற்பைப் பெற்றுள்ளது.அதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.தமிழ்நாட்டு மக்களின் மனதில் உள்ளதை அவர் வெளிப்படுத்திவிட்டார் என்று பாராட்டுகளும் கிடைத்து வருகின்றன.