புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே கடும் மோதல் எழுந்துள்ளது.
இந்த நிலையில், பிஎம்-ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு கல்வித் துறை அனுப்பிய ஒப்புதல் கடிதத்தை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமூகவலை தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் நேற்று பேசியதாவது….
பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கு தமிழ்நாடு ஒப்புதல் அளித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தை நான் தவறாக வழிநடத்தியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், முதல்வர் ஸ்டாலினும் என்மீது குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தனர். நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தில் நான் உறுதியாக உள்ளேன். கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 15 தேதியிட்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய ஒப்புதல் கடிதத்தை பகிர்ந்து கொள்கிறேன். ஒப்புதல் தெரிவித்துவிட்டு பின்னர் மறுப்பு தெரிவிப்பது ஏன்?
என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், சமூகவலை தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது….
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தவறான தகவல்களைப் பரப்புவதால் உண்மைகள் மாறிவிடாது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.எங்கள் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் இல்லை. தமிழ்நாடு அரசின் 2024 மார்ச் 15 ஆம் தேதியிட்ட கடிதமும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதாக இல்லை. மாணவர்களுக்கு நன்மை பயக்கும்போது மட்டுமே ஒன்றிய அரசின் திட்டங்களை ஏற்கிறோம். அதற்காக அனைத்துத் திட்டங்களையும் கண்மூடித்தனமாக ஏற்க முடியாது. அந்தக் கடிதத்தில், ஒரு குழு அமைக்கப்பட்டு அதன்பரிந்துரைகளின்படி திட்டத்தில் சேருவது குறித்து முடிவு செய்வோம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், தேசிய கல்விக் கொள்கையை திணித்து தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், மரபையும் சிதைக்க முயற்சிப்பவர்கள்தான் தற்போது அரசியல் செய்கின்றனர். தமிழ்நாட்டுக் குழந்தைகள் நலனுக்கு எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமையை அங்கீகரித்து ஆதரிப்பதன் மூலம் நீங்கள் தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கும் சிறந்த சேவையை செய்கிறீர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தர்மேந்திரபிரதானின் குற்றச்சாட்டு குறித்து திருச்சி சிவா கூறியதாவது….
தமிழ்நாடு முதலமைச்சருக்கு 30/08/24 அன்று தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதத்தில்,
2024-25 கல்வியாண்டில் பிஎம் ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட விருப்பம் தெரிவித்து, 15.03.2024 அன்று தமிழ்நாடு அரசு ஒரு உறுதிமொழி வழங்கியதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். இந்த உறுதிமொழியைப் பெற்ற பிறகு, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை (DOSEL) தமிழ்நாட்டிற்கு ஒரு வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அனுப்பியது. இருப்பினும், 06.07.2024 தேதியிட்ட கடிதத்தில்,புதிய கல்விக் கொள்கை 2020 ஐ முழுமையாகச் செயல்படுத்துவது குறித்து குறிப்பிடும் முக்கிய பத்தி கைவிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் தமிழ்நாடு அரசு பதிலளித்ததைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்
இவ்வாறு தர்மேந்திர பிரதான் அதில் தெரிவித்துள்ளார்.
2024 ஜூலை மாதத்தில் புதிய கல்விக் கொள்கையை ஏற்கவியலாது என்று சொல்லிவிட்டீர்களே வருத்தப்படும் தர்மேந்திர பிரதான்,அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் அதிகாரிகள் அனுப்பிய கடிதத்தைக் காட்டி நீங்கள் ஒப்புக்கொண்டீர்கள் என்று சொல்கிறார்.
இதனால் தான் ஒன்றிய கல்வி அமைச்சர் உண்மைக்கு மாறாகப் பேசுகிறார் என்று சொல்கிறோம்.
இவ்வாறு திருச்சி சிவா கூறியுள்ளார்.